கொளம் ஆயர் சமூக மன்றத்தில் நாற்பது ஆண்டுகள் நீடிக்கும் வருடாந்தர ஏற்பாடு

இளம் நெஞ்சங்களில் தமிழ் ஆர்வத்தை விதைக்கும் போட்டிகள்

3 mins read
bea4afe9-7851-48fe-97d9-c460b7d29c37
கோ.சாரங்கபாணி, லீ குவான் யூ, விளையாட்டு வீராங்கனை சாந்தி பெரேரா உள்ளிட்ட சிங்கப்பூரின் வரலாற்று ஆளுமைகளாக மாணவர்கள் வேடமிட்டனர்.  - படம்: மக்கள் கழகம் 

தொடர்ந்து களைகட்டும் சிங்கப்பூரின் 60ஆவது கொண்டாட்டங்களின் அங்கமாக மாறுவேடப் போட்டி ஒன்று கொளம் ஆயர் சமூக மன்றத்தில் நடைபெற்றது.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ, பழம்பெரும் சமூகத் தலைவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி, விளையாட்டு வீராங்கனை சாந்தி பெரேரா உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளாக தொடக்கநிலை 2 மாணவர்கள் வேடமிட்டு மேடையில் பேசினர்.

மாறுவேடப் போட்டியுடன், தொடக்கப்பள்ளி, பாலர் பள்ளிகளுக்கிடையே தமிழ்மொழிப் போட்டிகளுக்குப் பரிசளிப்பு விழாவும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.

கொளம் ஆயர் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் கொளம் ஆயர் இளையரணியும் இணைந்து இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தன.

பாரம்பரிய கலைகளுக்கான பிரிவில் தொடக்கநிலை 5ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கெடுத்து வெவ்வேறு இந்தியப் பாரம்பரிய கலைகளை மேடையேற்றினார்கள். 
பாரம்பரிய கலைகளுக்கான பிரிவில் தொடக்கநிலை 5ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கெடுத்து வெவ்வேறு இந்தியப் பாரம்பரிய கலைகளை மேடையேற்றினார்கள்.  - படம்: மக்கள் கழகம் 

சிங்கப்பூரின் 60வது ஆண்டு வளர்ச்சி பற்றி மாணவர்கள் தமிழ்மொழிவழி வெளிப்படுத்த இவ்வாண்டின் போட்டிகள் ஊக்குவித்தன.

ஜாலான் புசார் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகர் டாக்டர் வான் ரிஸால், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

ஜாலான் புசார் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகர் டாக்டர் வான் ரிஸால் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஜாலான் புசார் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகர் டாக்டர் வான் ரிஸால் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். - படங்கள்: மக்கள் கழகம் 

தமிழ்மொழி வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்நிகழ்ச்சியைப் பாராட்டிய திரு ரிஸால், “தாய்மொழிக்கு முன்னுரிமை அளிப்பதால் சிங்கப்பூர்ச் சமூகம் மேலோங்குகிறது,” என்றார்.

நாற்பதாவது ஆண்டாக நடைபெற்றுவரும் இந்தப் போட்டிகள் ஆகஸ்ட் 16ஆம் தேதி ஏழு பிரிவுகளில் தொடங்கின.

பாலர் பள்ளி முதல் வகுப்பிலிருந்து தொடக்கநிலை 6ஆம் வகுப்பு வரை ஏறத்தாழ 70 பள்ளிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 220 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பாலர் பள்ளி மாணவர்கள் காட்டிப் பேசுதல் போட்டியில் (Show and Tell) கலந்துகொண்டனர்.

தொடக்கநிலை 1 மாணவர்கள், கதை சொல்லும் போட்டியில் தங்கள் திறன்களை வெளிக்காட்டினார்கள்.

தொடக்கநிலை 3, 4ஆம் வகுப்பு மாணவர்கள் பாட்டு, சுவரொட்டி வடிவமைப்பு போட்டிகளில் பங்கெடுத்தனர்.

இவ்வாண்டு புதிதாக அறிமுகம் கண்ட பாரம்பரியக் கலைகளின் விழிப்புணர்வுப் பிரிவில் தொடக்கநிலை 5ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கெடுத்து வெவ்வேறு இந்தியப் பாரம்பரியக் கலைகளை மேடையேற்றினார்கள்.

ஆசிரியர்கள், பெற்றோர் இடையே இந்தப் பிரிவு மிகுந்த வரவேற்பைப் பெற்றது என்று போட்டியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் ஹேமமாலினி, 55, தெரிவித்தார்.

“பாரம்பரியக் கலைகள் பற்றிய கற்றல் மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோருக்கும் இந்தப் பிரிவின்வழி சேர்ந்தது,” என்றார் அவர்.

தொடக்கநிலை 6ஆம் வகுப்பு மாணவர்கள், கட்டுரை எழுதும் போட்டியில் கலந்து கொண்டனர். இந்தப் போட்டி ஜூலை மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது.

முதல்முறையாக கதைசொல்லும் போட்டியில் பங்குபெற்று இரண்டாவது பரிசை தட்டிச்சென்றார் மேரிமவுண்ட் கான்வெண்ட் பள்ளி மாணவி கண்மணி சிவபாலன், 7.

முதல்முறையாக கதைசொல்லும் போட்டியில் பங்குபெற்று இரண்டாவது பரிசை தட்டிச்சென்றார் மேரிமவுண்ட் கான்வெண்ட் பள்ளி மாணவி கண்மணி சிவபாலன், 7. 
முதல்முறையாக கதைசொல்லும் போட்டியில் பங்குபெற்று இரண்டாவது பரிசை தட்டிச்சென்றார் மேரிமவுண்ட் கான்வெண்ட் பள்ளி மாணவி கண்மணி சிவபாலன், 7.  - படங்கள்: மக்கள் கழகம் 

செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி பல்லின மாணவர்களுக்கு இடையே மலரும் நட்பை சித்திரிக்கும் ஒரு கதையை உருவாக்கினார்கள் கண்மணியின் பெற்றோர்.

“இந்தப் போட்டிக்கு மேற்கொண்ட பயிற்சி அவளுடைய உச்சரிப்பை மேம்படுத்தி தன்னம்பிக்கையை அதிகரித்தது,” என்று பகிர்ந்தார் கண்மணியின் தாயார் வினோதினி, 37.

இதுபோன்ற அனுபவங்கள் வெற்றிபெறுவதற்கு மட்டும் வழிவகுப்பதில்லை என்றும் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு தளம் என்றார் தாயார் அவனி மணிகண்டன்.

“மக்கள் முன்னிலையில் எப்படி நம்பிக்கையுடன் உரையாற்றுவது, வெற்றி தோல்விகளிடையே நிதானம் காப்பது போன்ற பண்புகளை போட்டிகள்வழி மாணவர்கள் வளர்க்கலாம். இது பிற்கால வாழ்க்கைக்குத் துணைநிற்கும்,” என்றார் அவர்.

எல்லாப் பிரிவுகளிலும் பங்குபெற்று அதிக புள்ளிகளைப் பெற்ற ‘சிஎச்ஐஜே அவர் லேடி குவீன் ஆஃப் பீஸ்’ தொடக்கப்பள்ளிக்குச் சிறப்புச் சவால் கிண்ணம் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்