உயர் ரத்த அழுத்தத்திலிருந்து நம்மைச் சிறு வயதிலிருந்தே தற்காத்துக்கொள்வது சிறந்தது ஆகும்.
நமது சொந்த உடல்நலத்தைப் பாதுகாப்பது முக்கியம். அது மட்டுமன்றி, நமது பெற்றோர், குடும்பத்தினரின் உடல்நலத்தில் அக்கறை கொள்வதும் நம் கடமை.
புக்கிட் வியூ தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 11 வயது இஷானி சண்முகம், உடல்நலத்தைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டு உள்ளார்.
ஓய்வு நேரத்தில் இஷானி, உடல்நலம் பற்றிய புத்தகங்களைப் படிப்பதுடன் காணொளிகளையும் பார்க்கிறார்.
‘பிபி படிஸ்’ (BP Buddies) என்ற நிகழ்ச்சிக்குத் தன்னை அழைத்துச் செல்ல இஷானி தம் தாயாரைக் கேட்டுக்கொண்டார்.
“புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வதிலும் திறன்களைக் கற்பதிலும் எனக்கு விருப்பம் உள்ளது. செயலி ஒன்றின்வழி இதனைப் பற்றித் தெரிந்தபோது, இந்த நிகழ்ச்சி பற்றி நான் என் தாயாரிடம் உடனே சொன்னேன்,” என்று இஷானி கூறினார்.
புக்கிட் வியூ தொடக்கப்பள்ளியில் இந்த நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிட்டத்தட்ட 100 மாணவர்களும் அவர்களது பெற்றோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நமது உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டுசெல்ல நம் இதயம் செயல்படுகிறது. ரத்தத்தைச் செலுத்த இதயம் சிரமப்படும்போது உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ரத்த அழுத்தத்தால் பாதிப்படையாமல் இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். இதற்கு, வெளியில் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவது நல்லது.
அத்துடன், ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவியைக் கொண்டு உடல்நிலையைக் கண்காணிப்பது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.
‘பிபி படிஸ்’ வழி ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் கருவியைப் பயன்படுத்த இஷானி கற்றுக்கொண்டார். அந்தக் கருவியைப் பயன்படுத்தி தமது தாயாரின் ரத்த அழுத்த அளவைப் பரிசோதிக்க முடிவதை எண்ணி மகிழ்கிறார்.
இஷானியின் தாயார் திருவாட்டி வெண்ணிலா முனுசாமி, தமது மகளைக் கண்டு பெருமையடைவதாகக் கூறினார்.
“எனது உடல்நலத்தை உறுதிசெய்ய என் மகள் இவ்வளவு சிறிய வயதில் எனக்கு உதவுகிறார்,” என்று இல்லத்தரசியாக இருக்கும் அந்த 41 வயது தாயார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

