அழுக்கான சட்டையும் அழகான மனசும்!

அழுக்கான சட்டையும் அழகான மனசும்!

2 mins read
8b847e2c-1609-400b-9a33-ad372b22aafd
நாய்க்குட்டியைக் காப்பாற்றிய குமாரின் நல்ல செயலைப் பார்த்த அவனுடைய நண்பர்கள் அவனைப் பாராட்டினார்கள். - படம்: செயற்கை நுண்ணறிவு

குமார் தொடக்கநிலை மூன்றில் பயில்கிறான். அவனுக்குக் காற்பந்து விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும்.

ஒரு நாள் மாலை, குமார் தன்னுடைய புதிய சட்டையை அணிந்துகொண்டு காற்பந்து விளையாடுவதற்காக மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தான்.

புதிய சட்டையை நண்பர்களிடம் காட்டவேண்டும் என்ற ஆவலுடன் சென்றுகொண்டு இருந்தான்.

அப்போது, வழியில் இருந்த ஒரு சிறிய பள்ளத்திலிருந்து “லொள்... லொள்...” என்று ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.

குமார் எட்டிப் பார்த்தான். அங்கே ஒரு சின்னஞ்சிறிய நாய்க்குட்டி கத்திக்கொண்டு இருந்தது.

பள்ளத்தில் கொஞ்சம் சேறும் மணலும் இருந்தது. அதனால் நாய்க்குட்டியால் வெளியே வர முடியவில்லை.

குமாருக்கு நாய்க்குட்டியைப் பார்த்ததும் மனம் இளகியது. ஆனால், “இப்போது நாம் பள்ளத்தில் இறங்கி நாய்க்குட்டியைத் தூக்கினால், நம்முடைய புதிய சட்டை அழுக்காகிவிடுமே!” என்று ஒரு நிமிடம் தயங்கினான்.

அப்போது, அவனுக்குப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியை சொல்லிக்கொடுத்த “நன்மை கடைப்பிடி” என்ற ஆத்திசூடி வரி நினைவுக்கு வந்தது.

“எந்தச் சூழ்நிலையிலும் நாம் மற்றவர்களுக்கு நல்லதையே செய்ய வேண்டும்,” என்று ஆசிரியை சொல்லியிருந்தார்.

உடனே குமார் சட்டை அழுக்காவதைப் பற்றிக் கவலைப்படாமல், மெதுவாகப் பள்ளத்தில் இறங்கி அந்த நாய்க்குட்டியைத் தூக்கி வெளியே விட்டான்.

அவனுடைய சட்டையில் கொஞ்சம் சேற்று மணல் பட்டுவிட்டது. ஆனால், வெளியே வந்த அந்த நாய்க்குட்டி சந்தோஷமாக வாலை ஆட்டிக்கொண்டே அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது.

அதைப் பார்த்ததும் குமாருக்கு சட்டை அழுக்கான கவலை போய், மனத்திற்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது!

அங்கு வந்த அவனுடைய நண்பர்கள், குமார் செய்த உதவியைப் பார்த்து கைத்தட்டிப் பாராட்டினார்கள்.

குமார் அன்று காற்பந்து விளையாடியதை விட, அந்த நாய்க்குட்டிக்கு உதவியது மறக்க முடியாத நிகழ்ச்சியாக அவன் மனத்தில் பதிந்தது.

கதையின் நீதி:

குமார் செய்ததைப்போல நாமும் எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த நன்மையைச் செய்யத் தவறக் கூடாது. அதுவே நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும். இதுதான் ஔவையார் சொன்ன “நன்மை கடைப்பிடி” என்பதன் அர்த்தம்!

குறிப்புச் சொற்கள்