கடலின் வேட்டைக்காரர்கள்: ஆழ்கடலின் சுவாரசியத் தேடல்கள்!

கடலின் வேட்டைக்காரர்கள்: ஆழ்கடலின் சுவாரசியத் தேடல்கள்!

2 mins read
சிவாணி சக்திவேல்
d2932c4f-709c-4c9a-beeb-2857aa6abdf7
சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தின்  ‘ஷார்க் சீஸ்’ (Shark Seas) பகுதியில், சுறா மீன்களைப் பற்றி வழிகாட்டி விளக்கிக் கூற அதைக் கவனிக்கும் பார்வையாளர்கள். - படம்: சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகம், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா

டைனோசர்களைவிட பழமையானவை, பற்களுக்குப் பதிலாகக் கூர்மையான எலும்புத் தாடைகளைக் கொண்டவை. என்ன விலங்குகள் அவை?

இதற்கான பதிலை, சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகத்தில் புதிதாய் தொடங்கப்பட்டிருக்கும் ‘ஓஷன் இன் ஃபோகஸ்: கடலின் வேட்டைக்காரர்கள்’ (Ocean in Focus: Apex Predators) என்ற நிகழ்ச்சி வழங்கும்.

உலக சுறா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 60 நிமிடப் பயணம், வழக்கமான பார்வையிலிருந்து மாறுபட்ட தகவல்களைச் சிறுவர்களுக்குத் தருகிறது.

இதில் கலந்துகொள்வோர், கடலின் வேட்டைக்காரர்களான சுறாக்கள், பிற கடல் உயிரினங்கள் ஆகியவை பலதரப்பட்ட ஆண்டுகளாக எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளன என்பதை நேரில் கண்டறியலாம்.

இந்த அனுபவத்தின் மூலம், சுத்தியல் வடிவம் போன்ற விசித்திர தலையைக் கொண்ட ‘ஹேமர்ஹெட் சுறா’ (Hammerhead Shark), கூர்மையான பற்களுடைய ‘சாண்ட் டைகர் சுறா’ (Sand Tiger Shark) போன்ற பல்வேறு சுறாக்களை அருகில் பார்த்து அவற்றின் வடிவங்களை பார்வையாளர்கள் புரிந்துகொள்ள முடியும்.

மேலும், பண்டைய காலத்தில் வாழ்ந்த ‘டன்கிளியோஸ்டியஸ்’ (Dunkleosteus) என்ற மீனின் மாதிரியையும் ‘மெகலோடான்’ (Megalodon) சுறாவின் பற்களையும் இங்கே காணலாம்.

பொதுமக்கள் சாதாரணமாகப் பார்வையிடும் இடங்களைத் தாண்டி, இந்த நிகழ்ச்சிக்காகச் சில தனித்துவமான பகுதிகள் திறந்துவிடப்படுகின்றன.

பார்வையாளர்கள் சுறா மீன்களுக்கு உணவு கொடுக்கும் பகுதிக்குச் சென்று, மேலிருந்து அந்த வாழ்விடத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

சுறா மீன்களுக்கு உணவு அளிக்கப்படும் முறையைக் கவனிக்கும் பார்வையாளர்கள்.
சுறா மீன்களுக்கு உணவு அளிக்கப்படும் முறையைக் கவனிக்கும் பார்வையாளர்கள். - படம்: சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகம், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா.

அத்துடன், உண்மையான சுறா பற்கள், சுறா முட்டைகளின் பாதுகாப்புக் கூட்டினாலான ‘மெர்மைட்ஸ் பர்ஸ்’ (Mermaid’s Purse) ஆகியவற்றைத் தொட்டுப் பார்க்கவும் முடியும்.

சுறாக்களுக்கு உணவளிக்கும் போது பராமரிப்பாளர்கள் அணியும் சங்கிலியால் ஆன ‘செயின்மெயில்’ (Chainmail) கவச உடைகளை நேரில் ஆராயவும் இயலும்.

சுறாக்களுக்கு உணவளிக்கும் போது பராமரிப்பாளர்கள் அணியும் சங்கிலியால் ஆன கவச உடை.
சுறாக்களுக்கு உணவளிக்கும் போது பராமரிப்பாளர்கள் அணியும் சங்கிலியால் ஆன கவச உடை. - படம்: சிங்கப்பூர் கடல்வாழ் உயிரினக் காட்சியகம், ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா.

சுறாக்கள் வெறும் ஆபத்தான உயிரினங்கள் மட்டுமன்று, கடல் சூழலியலைச் சீராக்க அவை எவ்வளவு முக்கியம் என்பதைச் சிறார்களுக்கு விளக்குவதுதான் இதன் நோக்கம்.

பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை, சுறா இனங்களை அடையாளம் காணும் அட்டைகள், ‘டன்கிளியோஸ்டியஸ்’ பொம்மைச் சாவிக்கொத்து (Plush Keychain) ஆகியவை வழங்கப்படுகின்றன.

பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சுறா இனங்களை அடையாளம் காணும் அட்டை, ‘டன்கிளியோஸ்டியஸ்’ பொம்மைச் சாவிக்கொத்து.
பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் சுறா இனங்களை அடையாளம் காணும் அட்டை, ‘டன்கிளியோஸ்டியஸ்’ பொம்மைச் சாவிக்கொத்து. - படம்: சிவாணி சக்திவேல்.

ஒரு சுற்றுலாவிற்கு 12 பங்கேற்பாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கான கட்டணம் S$39 ஆகும் (கடல் காட்சியக நுழைவுக் கட்டணம் தனி).

குறிப்புச் சொற்கள்
கடல்செந்தோசாகாட்சியகம்சுறாமீன்