கண்ணனும் ராமுவும் ஒவ்வொரு வார இறுதியிலும் அருகில் இருக்கும் காட்டுப் பகுதியில் மெதுவோட்டம் ஓடுவது வழக்கம்.
அன்றும் வழக்கம்போல இருவரும் பேசிக்கொண்டே மெதுவோட்டம் ஓடிக்கொண்டிருந்தனர்.
அப்போது தொலைவில் ‘மினுக்... மினுக்..’ என ஒளி தெரிந்தது. அந்த ஒலியைப் பற்றி இருவரும் விவாதித்தபடி ஓடினர்.
தொலைவில் இவ்வளவு சிறியதாக அந்த வெளிச்சம் தெரிகிறதே. அது ஒரு மிதிவண்டியாகத்தான் இருக்கும் என்றான் கண்ணன்.
இல்லை... இல்லை... இது மெதுவாக அசைந்து அசைந்து வருவதிலிருந்து யாரோ விளக்கை ஏந்தியபடி நடந்து வருகிறார்கள் என்றான் ராமு.
கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் நெருங்கியது.
என்னவென்று காணும் ஆர்வத்தோடு நின்றனர்.
முதியவர் ஒருவர் கையில் விளக்கு ஏந்தி தள்ளாடியபடி நடந்து வந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களுக்கு அவரைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.
அவர் விளைக்கைக் கையில் வைத்துக்கொண்டு தட்டித் தடுமாறி வந்து கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த கண்ணன், “என்ன தேடுகிறீர்கள் ஐயா?” என்றான்.
முதியவர் திடீரென்று சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.
அப்போதுதான் அவர் பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி என்பது அவர்களுக்குப் புரிந்தது.
“உங்களுக்கு கண்ணு தெரியாதா? அப்படியென்றால் நீங்கள் எதற்கு கையில் விளக்கு ஏந்தி வருகிறீர்கள்?” என்று கிண்டலுடன் கேட்டான் ராமு.
அவர்கள் தன்னைக் கேலி செய்வதை உணர்ந்த அந்த பெரியவர், “இந்த விளக்கு எனக்காக எடுத்து வரவில்லை தம்பிகளா. உங்களைப் போல் எதிரில் வருவோர் அறிந்துகொள்ளத்தான் கொண்டு செல்கிறேன். ஏனென்றால், இருட்டில் நடந்து வருபவர்களுக்கு எதிரில் வருபவர்களைப் பார்த்தால்தான் நேரிடையாக மோதிக்கொள்ள மாட்டார்கள். அதனால் விபத்து தவிர்க்கப்படும்,” என்றார்.
அவருடைய விளக்கத்தைக் கேட்டு இருவரும் தங்கள் தவறை உணர்ந்தனர். இருவரும் யாரையும் கேலி செய்து, ஏளனமாக எடை போட கூடாது என்பதை உணர்ந்தனர். இருவரும் அந்த பெரியவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அங்கிருந்து கனத்த இதயத்துடன் வீடு திரும்பினர்.

