படிக்க சிறக்க: உள்ளத்தை மலர வைக்கும் பிள்ளையின் பரிவு

படிக்க சிறக்க: உள்ளத்தை மலர வைக்கும் பிள்ளையின் பரிவு

2 mins read
239ed577-7b1e-4f92-bc34-b801e45b46cb
சிற்றப்பாவை வரைகலை வழி மகிழ்வித்த சிறுவன் - படம்: செயற்கை நுண்ணறிவு

பள்ளியில் கொடுக்கப்பட்ட வீட்டுப் பாடங்களை முடித்தபிறகு, ஓய்வு நேரத்தில் கேலிச்சித்திரம் வரையும் பழக்கம் பன்னிரண்டு வயது சுவினுக்கு உண்டு.

அந்தப் படங்களைப் பயன்படுத்தி வாழ்த்து அட்டைகள், கைப்பைகள், சட்டைகள் போன்றவற்றை அவன் உருவாக்குவான்.

சுவினுக்கு சீலன் என்ற 27 வயது சிற்றப்பா உள்ளார்.

பல்கலைக்கழகப் படிப்பை முடித்த அவர், கடந்த மூன்றாண்டுகளாக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

நேரம் கிடைக்கும்போது சுவினின் வீட்டுக்கு சீலன் வருவது வழக்கம்.

சுவினின் தந்தைக்குத் தம்பியான சீலன், சுவின்மீது மிகுந்த பாசம் உள்ளவர். 

எல்லோருடன் பேசுவது மட்டுமல்லாமல் அவர்கள் சொல்வதைக் கவனித்து அவரும் அதற்கு ஏற்ற வகையில் பதில் சொல்வார்.

சீலன் சிற்றப்பா இயல்பாகவும் கலகலப்பாகவும் பேசும் இயல்புள்ளவர்.

சீலன் சிற்றப்பா  கண்டு சுவின் நல்ல பழக்கங்களைக் கற்றுக்கொள்வதைக் கண்டு அவரது பெற்றோர் மகிழ்கின்றனர்.

ஒருநாள், சிற்றப்பா சீலன் சற்று வாட்டத்துடன் வீட்டுக்கு வந்திருந்ததை சுவின் அறிந்தான்.

சுவினைக் கண்ட அவர் எப்போதும் போல புன்னகைத்தபோதும் அவனுடன் அதிக நேரம் உரையாடவில்லை.

சற்று முன்கூட்டியே தமது வீட்டுக்கு சீலன் புறப்பட்டார்.

தமது சிற்றப்பா ஏதோ கவலையில் இருப்பது போல சுவினுக்குத் தோன்றியது.

அன்றிரவு பேசிக்கொண்டிருந்த பெற்றோரைச் சுவின் அணுகி சிற்றப்பாவைப் பற்றிக் கேட்டார்.

“சிற்றப்பாவின் முகம் சற்று வாடியிருந்ததே.  அவருக்கு ஏதேனும் பிரச்சினையா?,”  என்று அவர் கேட்டார்.

அவனது தந்தை சற்று யோசித்துவிட்டு, “சிற்றப்பா ஆட்குறைப்புக்கு ஆளாகியுள்ளார். மூன்று ஆண்டுகளாக அவர் பார்த்திருந்த வேலை திடீரென இல்லாமல் போய்விட்டது,” என்று அவரது தந்தை கூறினார்.

“ ஆட்குறைப்பு என்றால் என்ன?,” என சுவின் கேட்டார்.

வேலை இடமாக இயங்கும் நிறுவனத்தில் வருவாய் குறைந்தால் அந்நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்க பணியாளர் சிலரை ஆட்குறைப்பு செய்யும் அல்லது  ஊழியர்களின் திறன்கள் தேவையில்லை என வேலையிடம் கருதினால் அவர்களும் ஆட்குறைப்புக்கு  ஆளாகலாம் என சுவினின் பெற்றோர் விளக்கம் அளித்தனர்.

“அவ்வப்போது சிலர் ஆட்குறைப்புக்கு ஆளாவது இன்றைய சூழலின் இயல்பு.  உன் சிற்றப்பாவுக்கு மீண்டும் வேலை கிடைக்கும், ஆனால் அவர் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும்,” என்று சுவினின் தாயார் கூறினார்.

தமக்கு எப்போதும் அன்பு காட்டி வரும் சிற்றப்பாவை மகிழ்விக்க எண்ணிய சுவின், இறுதியில் தமது கேலிச்சித்திரங்கள் பொறிக்கப்பட்ட சட்டை ஒன்றைத் தன் சிற்றப்பாவுக்குத் தந்தான். இதனால், சீலன் சிற்றப்பா பெரிதும் மகிழ்ந்தார்.

சுவினை ஆரத்தழுவி அவனுடைய கன்னத்தில் முத்தம் அளித்தார்.

“வாழ்க்கையில் சவால்களும் சிக்கல்களும் வந்து போகும். இன்றைய வேதனை, நாளை மறந்துபோகலாம். ஆனால், நீ என்மீது பொழிந்த அன்பை நான் மறக்கமாட்டேன்,” என அவர் கூறினார்.

ஆட்குறைப்பு மட்டுமன்றி அன்புக்குரியவர்க்கு எந்தக் கடினமான சூழல் ஏற்பட்டாலும், அவர்களை அன்புடன் ஆதரிக்கும் பொறுப்பு சிறாருக்கும் உள்ளது.

குறிப்புச் சொற்கள்