தொடக்கநிலை மூன்றில் பயிலும் மாணவி ரோஷினி, அழகாகவும் அடக்கமாகவும் இருக்கிறார். அவரது முகத்தில் எப்போதும் உற்சாகமும் ஆர்வமும் காணப்படும்.
ஓவியம் வரையவும் கைவினைப்பொருள்களை உருவாக்கவும் அவரால் எளிதில் முடியும்.
ஆனால், தம் தோற்றம் மாநிறத்தில் இருப்பது ரோஷினிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பள்ளியில் பிற மாணவிகளின் தோல் வெண்மையாக இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் கவலை கொள்வார்.
ரோஷினி அழகாக இருப்பதாகப் பெற்றோர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோரும் பாராட்டுவர். ஆனால், தமக்கு ஏதோ குறை இருப்பதாகவே நினைத்துவந்த அந்தச் சிறுமிக்கு நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
ஒருநாள் திருவாட்டி வானதி என்ற புதிய ஆசிரியர் பள்ளியில் சேர்ந்தார். கணக்குக் கற்பிக்கும் இந்த ஆசிரியர், மாநிறத் தோல் உள்ளவர். அவர் தம் அழகால் அனைவரின் கவனத்தையும் கவர்கிறார்.
“ஆஹா... வெண்மையான தோல் நிறம் உள்ளவர்கள்தான் அழகானவர்களாகக் கருதப்படுகிறார்கள் என எண்ணினேன். திருவாட்டி வானதியோ, பளிச்சென்று இருக்கிறார். அவர் தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார்,” என்று ரோஷினி நினைத்துக்கொண்டிருந்தார்.
திருவாட்டி வானதி தமது வகுப்பிற்குக் கணக்கு ஆசிரியை இல்லை என்பதால், வகுப்பில் அவரிடம் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆயினும் அவருடன் எப்படியேனும் பேச வேண்டும் என எண்ணி, ஒருநாள் பள்ளி முடிந்ததும் ஆசிரியர்களின் அலுவலக அறைக்குச் சென்று பார்த்தார்.
அங்கே, திருவாட்டி வானதி வினாத்தாள்கள் சிலவற்றைத் திருத்திக்கொண்டிருந்ததை ரோஷினி பார்த்தார். சற்று நேரம் காத்திருந்த பின்னர், திருவாட்டி வானதி நிமிர்ந்து பார்த்தபோது ரோஷினி அவரைப் பார்த்து, “வணக்கம், திருவாட்டி வானதி,” எனப் புன்னகையுடன் கூறினார்.
“வணக்கம்மா. யாரைப் பார்க்க வந்திருக்கிறாய்?” என்று அந்த ஆசிரியர் கேட்டார்.
“நான் உங்களைப் பார்த்துப் பேசத்தான் வந்தேன்,” என்று ரோஷினி கூறினார்
“ஓ, அப்படியா? உன் பெயர் என்னம்மா?” என்று திருவாட்டி வானதி கேட்டார்.
“என் பெயர் ரோஷினி. நான் தொடக்கநிலை மூன்றாம் வகுப்பில் பயில்கிறேன்,” என்று அந்தச் சிறுமி கூறினார்.
இருவருமே சற்று நேரம் இருக்கையில் அமர்ந்து பேசினர். “ஆசிரியை, நீங்கள் மாநிறத் தோல் உள்ளவர். ஆனாலும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். எதனால் அப்படி?” என ரோஷினி கேட்டார்.
ரோஷினியின் எண்ணங்களைத் திருவாட்டி வானதி புரிந்துகொண்டார்.
“கறுப்பான ஆண்கள் பலர் உறுதியான உடல், மிடுக்கான பார்வை, வீரம், தெளிவான பேச்சு, தூய்மையான பழக்க வழக்கங்கள், நகைச்சுவை உணர்வு போன்ற குணங்களால் அழகாகத் தோன்றுகிறார்கள். தோல் வெண்மையான ஆண்களுக்கு இந்தக் குணங்கள் இல்லை என்றால் அவர்களை அழகர்களாக உலகம் ஏற்காது,” என்றார் அந்த ஆசிரியர்.
இது பெண்களுக்கும் பொருந்தும் என்று திருவாட்டி வானதி கூறினார்.
ஒருவரின் அழகை அவரது பழக்க வழக்கங்கள் முடிவு செய்வதாகத் திருவாட்டி வானதி தெரிவித்தார். பயத்துடனும் தீய எண்ணங்களுடனும் இருப்பவர்கள் காலப்போக்கில் தங்கள் அழகைக் கெடுத்துக்கொள்வதாகத் திருவாட்டி வானதி கூறினார்.
“தன்னம்பிக்கையைப் போராடி வளர்த்துக்கொள். உன் திறமையை மேம்படுத்தி வா. உடற்பயிற்சி, சத்துணவு, நல்ல எண்ணங்கள் ஆகியவற்றால் நீயும் அழகாகத் தோற்றமளிப்பாய்,” என்று அந்த ஆசிரியர் கனிவுடன் கூறினார்.
ரோஷினிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தம் சொந்தத் தோல் நிறத்தை மதிக்கக் கற்றுக்கொண்ட அச்சிறுமி, நல்ல பழக்கங்கள் வழி மேலும் அழகாகத் தோன்ற உறுதி எடுத்துக்கொண்டார்.

