அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்தது விண்வெளி. அதனைப் பற்றிய ஆய்வுகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
செயற்கைக்கோள்கள், தொலைநோக்கி ஆகியவற்றின் வழியாக விண்வெளியின் அழகை மனிதர்கள் கண்டு ரசிக்கலாம்.
தற்போதைய அறிவியல் வளர்ச்சிக்கு முன்பாகவே பழந்தமிழர்கள் விண்வெளியைப் பற்றி ஆராய்ந்தனர். விண்மீன்களை நெடுங்காலமாக ஆய்வு செய்து கோள்களின் நகர்வையும் அன்றைய ஆய்வாளர்கள் அறிந்ததால் அவற்றுள் சிலவற்றுக்குத் தமிழ்ப் பெயர்கள் உள்ளன.
செவ்வாய் (Mars): செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் அதிக அளவு ‘இரும்பு ஆக்சைடு’ (iron oxide) காணப்படுகிறது. இதனால் அந்தக் கோள் வான்வெளியில் செந்நிறத்தில் ஒளிர்கிறது.
புதன் (Mercury): புத்தி (அறிவு) என்ற சொல்லுடன் தொடர்புடையது இந்தப் பெயர். வானில் இந்தக் கோள் வேகமாக நகர்கிறது. சூரியனை நம் பூமி வலம் வர ஓராண்டு ஆகிறது. ஆனால், சூரியனை வலம் வர புதனுக்கு 88 நாள்கள்தான் ஆகிறது.
வியாழன் (Jupiter): ‘விய’ அல்லது ‘வியன்’ என்ற வேர்ச்சொல்லுக்கு, ‘பெரிய’, ‘விரிவான’ அல்லது ‘வியக்கத்தக்க’ என்று பொருள் உள்ளது. கோள்களில் ஆகப் பெரிதான வியாழன், பூமியைக் காட்டிலும் 11 மடங்கு அகலமானது.
வெள்ளி (Venus): இந்தக் கோளின் வெண்மையையும் ஒளிரும் தன்மையையும் குறிப்பிடுவதாக ‘வெள்ளி’ என்ற பெயர் அமைந்துள்ளது. சூரியனுக்கும் நிலவிற்கும் அடுத்தபடியாக வானத்தில் மிக அதிகமாக ஒளிரக்கூடிய ஒரே விண்பொருள் இந்தக் கோள்தான்.
சனி (Saturn): வடமொழியில் ‘சனை’ என்றால் ‘மெதுவாக’. சூரியனை வலம் வர சனிக் கோளுக்கு 29.45 ஆண்டுகளாகிறது. தூய தமிழிலில் சனியை முடவன் என்றும் காரி என்றும் அழைப்பதுண்டு.

