விளையாட்டு வழி ஒற்றுமையை நிலைநாட்டிய காற்பந்தாட்டக் கிண்ணப் போட்டி

விளையாட்டு வழி ஒற்றுமையை நிலைநாட்டிய காற்பந்தாட்டக் கிண்ணப் போட்டி

2 mins read
2dfd1c44-2c99-4ff0-b368-a079a4830b6f
காற்பந்துப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை வென்ற அணியினர் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். - படம்: சிண்டா

சிங்கப்பூர் ஒரு பல்லினச் சமுதாயம். வேற்றுமையில் ஒற்றுமையை விதைக்கும் வண்ணம், ‘யூனிட்டி’ காற்பந்தாட்டக் கிண்ணப் போட்டி அண்மையில் (ஜூன் 23) நடந்தேறியது. அப்போட்டியில், 6-13 வயதுள்ள குழந்தைகள் பங்கேற்றனர். மாணவர்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த சக மாணவர்களுடன் குழுக்களாக விளையாடினர்.

ஒன்றாகப் பயிற்சி செய்து, இரண்டு நாட்கள் போட்டிகளில் உற்சாகமாகப் பங்கேற்றனர். அதன் வழி, புது நண்பர்களைச் சந்தித்ததோடு, இன நல்லிணக்கத்தையும் மாணவர்கள் பறைசாற்றினர்.

அத்துடன், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டதோடு மரியாதை, விடாமுயற்சி, தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை ஆகிய விழுமியங்களையும் மேம்படுத்திக்கொண்டனர்.

அண்ணன் முகமது சஃப்வான் (இடது), தன் தங்கை நூர் ஷஃபிகாவுடன் (வலது) காற்பந்துக் கிண்ணத்தில் பங்கேற்றார்.
அண்ணன் முகமது சஃப்வான் (இடது), தன் தங்கை நூர் ஷஃபிகாவுடன் (வலது) காற்பந்துக் கிண்ணத்தில் பங்கேற்றார். - படம்: சிண்டா
சிண்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், காற்பந்துப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
சிண்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன், காற்பந்துப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுடன் கலந்துரையாடினார். - படம்: சிண்டா

காற்பந்தாட்ட கிண்ணப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற அண்ணன் தங்கை

சிறு வயதிலிருந்தே காற்பந்தாட்டத்தில் பேரார்வம் கொண்டுள்ளார், 8 வயதான முகமது சஃப்வான். தன் மாமாவுடன் காற்பந்து விளையாட்டுகளைத் தொலைக்காட்சியில் கண்டு ரசித்த இவருக்கு அந்த ஆட்டத்தை விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற நாட்டமும் வளர்ந்தது. 7 வயதில், சஃப்வான் காற்பந்து வகுப்புகளில் துடிப்புடன் பங்கேற்கத் தொடங்கினார்.

இவ்வாண்டு யூனிட்டி காற்பந்தாட்ட கிண்ணப் போட்டியில் முதன்முறையாகப் பங்கேற்றார், சஃப்வான். “எனக்கு காற்பந்து விளையாடுவது மிகவும் பிடிக்கும். எனக்கு விளையாட்டுகளில் வெற்றி பெறும்பொழுது கிடைக்கும் இன்பம் ஈடற்றது. அதுவும் அப்போட்டியில் பங்கேற்றதன் வழி நான் நிறைய புது நட்புறவுகளை வளர்த்துக்கொண்டேன்,” என்று சஃப்வான் இன்புற்றுக் கூறுகிறார்.

காற்பந்தில் சஃப்வான் கொண்டுள்ள எல்லையில்லா நாட்டத்தைக் கண்டு வளர்ந்தார் அவருடைய தங்கை, 7 வயதான நூர் ஷஃபிகா. இவரும் யூனிட்டி காற்பந்தாட்டக் கிண்ணப் போட்டியில் இவ்வாண்டு முதன்முறையாகப் பங்கேற்றார்.

“இந்தப் போட்டியில் பங்கேற்றது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. நான் என் நண்பர்களுடன் ஒற்றுமையாக விளையாடக் கற்றுக்கொண்டேன். எனக்கு காற்பந்து மீது உள்ள நாட்டம் அதிகரித்துள்ளது,” என்று சுட்டியாகக் கூறினார் ஷஃபிகா.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துமாணவர்மாணவர் முரசு

தொடர்புடைய செய்திகள்