ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் காலை உணவுப் பைகள்

ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசக் காலை உணவுப் பைகள்

படம்: ஃபேர்பிரைஸ் குழுமம்

24 Aug 2026 - 7:40 am

2 mins read
இந்த இலவச உணவுப் பைகள் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 51 சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய அங்காடிகளில் விநியோகிக்கப்படும்.
இந்த இலவச உணவுப் பைகள் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 51 சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய அங்காடிகளில் விநியோகிக்கப்படும். - படம்: ஃபேர்பிரைஸ் குழுமம்

தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வுக்குத் தயாராகும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு 12,000 இலவசக் காலை உணவுப் பைகள் வழங்கப்படவுள்ளன.

ஒவ்வொரு பையிலும் $25க்கும் மேல் மதிப்புள்ள ‘மைலோ’, ‘ஓட்ஸ்’ பால், தானிய உணவு, ஆப்பிள், சிக்கன் எஸ்ஸென்ஸ் போன்ற பல்வேறு உணவுப் பொருள்கள் இருக்கும்.

இந்த இலவச உணவுப் பைகள் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 51 சியர்ஸ், ஃபேர்பிரைஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய அங்காடிகளில் விநியோகிக்கப்படும்.

செப்டம்பர் 4ஆம் தேதியிலிருந்து 6ஆம் தேதி வரை அங்காடிகளின் செயல்பாட்டு நேரத்திற்குள் பொட்டலங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

உணவுப் பையைப் பெற விரும்பும் மாணவர்கள் தங்கள் மாணவர் அடையாள அட்டை அல்லது தேர்வு அனுமதிச் சீட்டைக் காண்பிக்க வேண்டும். மாணவர்கள் வரமுடியாத பட்சத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மாணவர் அடையாள அட்டையைக் காட்டியும் இதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு மாணவருக்கு ஓர் உணவுப் பை மட்டுமே தரப்படும். இருப்பு இருக்கும் வரை மட்டுமே பைகள் வழங்கப்படும்.

இந்த முயற்சியைப் பெற்றோர் வரவேற்றுள்ளனர்.

“ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இது ஒரு சவாலான, சோர்வு மிகுந்த நேரமாக இருக்கலாம். அவர்களுக்குக் காலை உணவு வழங்குவது போன்ற ஓர் எளிய செயல், சமூகமும் அவர்களை ஆதரித்து ஊக்குவிக்கிறது என்பதைக் காட்டுகிறது,” என்றார் தாயார் ரதி, 40.

தன் மகள் சரிதா இவ்வாண்டு இறுதியாண்டுத் தேர்வை எழுதவுள்ளார். குறிப்பாகப் பள்ளி நாள்களில் சரிதா சில சமயங்களில் விரைவாகக் கிடைக்கும் எளிமையான காலை உணவை விரும்புவதாகத் தெரிவித்தார் ரதி.

“மாணவர்கள் காலையில் அவசரமாகப் பள்ளிக்குச் செல்லும்போது எளிதாக உட்கொள்ளக்கூடிய, நடைமுறைக்கு ஏற்ற காலை உணவுப் பொருள்கள் இந்தப் பைகளில் அடங்கியுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

அதோடு, வசதி குறைந்த மாணவர்களுக்கும் இந்த முயற்சி மிகவும் உதவியாக இருக்கிறது என்று 47 வயது ஃபாத்திமா பர்வின் கூறினார்.

“சிக்கன் எஸ்ஸென்ஸ் ஒரு குழந்தையின் உட்கொள்ளலுக்குப் பொருந்தாது என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். எனவே எதிர்காலத்தில் அதற்கு மாற்றாக ஒரு தானிய ‘பார்’ (cereal bar) விநியோகிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்