குடும்பங்களுக்கு இடையே தமிழ் கற்றலின் மூலம் பிணைப்பை வளர்க்கும் நோக்கத்தில் ‘தமிழ்ச் சந்தை: குடும்பத்துடன் மொழி விளையாட்டு’ எனும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) நடைபெற்றது.
தேசிய நூலக வாரியம் ‘தி போட்’ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் பங்கேற்றன.
பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வருகையளித்தார் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன்.
‘ஈடுபாடு’ என்ற இவ்வாண்டின் தமிழ்மொழி விழாவின் கருப்பொருளையொட்டி, இன்றைய நவீன காலகட்டத்தில் மொழிப் பயன்பாடு, பழக்கவழக்கங்கள் மாறிக்கொண்டே வருவதினால், அதை வாழும் மொழியாகத் தக்க வைக்கும் வழிகளும் மாறவேண்டும் எனத் திரு அன்பரசு அவரது சிறப்பு உரையில் குறிப்பிட்டார்.
“பெற்றோர்கள், பிள்ளைகளை வற்புறுத்தி தமிழ் மொழியைக் கற்பிக்காமல், இயல்பாக அவர்களிடையே அந்த மொழிக்கான நாட்டத்தையும் பற்றையும் ஏற்படுத்தி தமிழ் மொழியைக் கற்பித்தலே சிறந்தது,” என அவர் வலியுறுத்தினார்.
அவ்வகையில் இயல்பாகத் தமிழ் மொழியில் ஈடுபாடு காட்டி, நாட்டத்தை வளர்க்கும் வாய்ப்பாகவே அமைந்திருந்தது அந்நிகழ்ச்சியின் விளையாட்டுகள்.
‘கலக்காம பேசு கலகலா பேசு’, ‘மாத்தி யோசி’ போன்ற விளையாட்டுகள் படைப்பாற்றலையும் தமிழில் பேசும் தைரியத்தையும் வளர்க்கும் நோக்கம் கொண்டு உருவாக்கப்பட்டன. அவ்விளையாட்டுகளில் சிறுவர்களும் பெற்றோர்களும் உற்சாகமாகப் பங்கெடுத்தனர்.
அந்த நிகழ்ச்சியைத் திட்டமிட ஏறத்தாழ ஆறு மாதங்கள் எடுத்தன என்றார் ஜூரோங் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த இளம் தொண்டூழியர் தருண்ராஜ் நரசிம்மமூர்த்தி, 16.
தொடர்புடைய செய்திகள்
இளையர்கள் ஈடுபட நிறைய போட்டிகள், விழாக்கள் என வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

