பார்த்திபனின் ஞாயிறு மாலை: தேசிய தினப் பேரணி உரையால் விளைந்த நன்னினைவு

பார்த்திபனின் ஞாயிறு மாலை: தேசிய தினப் பேரணி உரையால் விளைந்த நன்னினைவு

2 mins read
9976e2cc-06a8-41c8-9298-da5d607bd7de
தேசிய தினப் பேரணி உரையை ஒன்றாகக் காணும் குடும்பம். - படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

11 வயதுச் சிறுவன் பார்த்திபன், புத்தகங்களை வாசிப்பதுடன் செய்தித் தாளையும் தவறாமல் படிக்கும் வழக்கமுடையவன்.

அவனது வீட்டில் பெற்றோர், தங்கையுடன் இணைந்து தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்ப்பது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமை மாலை வேளைகளில் வெளியே சென்று இரவு உணவருந்தும் இக்குடும்பத்தினர், ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று மட்டும் வீட்டிலேயே இருந்தனர்.

அன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலின்போது, தேசிய தினப் பேரணி உரை பற்றிக் குறிப்பிடப்பட்டது.

“நாம் ஏற்கெனவே தேசிய தின அணிவகுப்பைப் பார்த்துவிட்டோமே! பேரணி உரை என்பது வேறா?” என்று பார்த்திபன் கேட்டான்.

அதற்கு அவனது தந்தை, “ஆம் பார்த்திபன், பேரணி உரையைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மலாய், மாண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உரையாற்றுவார்,” என்று விளக்கினார்.

இரவு 8 மணிக்கு அங் மோ கியோ தொழில்நுட்பக் கல்விக் கழகத்திலிருந்து பிரதமரின் ஆங்கில உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பிரதமர் கூறிய முழுமையான விவரங்கள் புரியாவிட்டாலும், பார்த்திபன் உரையைக் கவனத்துடன் கேட்டான்.

பிரதமர் தனது உரையில் பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு குறித்த புதிய சலுகைகளை அறிவித்தபோது, பார்த்திபனின் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

6 வயதுத் தங்கை பிரமிளாவுக்காகக் கூடுதல் 6 நாள்களும், 12 வயதுக்குட்பட்ட பார்த்திபனுக்காக மேலும் 2 நாள்களும் என மொத்தம் 8 நாட்கள் கூடுதல் விடுப்பு அவனது பெற்றோருக்குக் கிடைக்கவுள்ளது.

பிள்ளைகளுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுடன் நேரத்தைச் செலவிட இக்கூடுதல் நாள்களைப் பயன்படுத்தலாம் எனத் தாயார் கூறினார். பிள்ளைகளுடன் நேரம் செலவிடுவதே பெற்றோருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பரிசு என்று பிரதமர் கூறியதை அவனது தந்தை வழிமொழிந்தார்.

மேலும், பிள்ளைப் பராமரிப்பு நிலையக் கட்டணம் மாதத்திற்கு 150 வெள்ளியாகவும், கைக்குழந்தைப் பராமரிப்புக் கட்டணம் 300 வெள்ளியாகவும் குறையும் என அரசாங்கம் அறிவித்தது.

இத்திட்டங்கள் குடும்பங்களுக்குப் பெரும் நிம்மதி தருவதாகத் தந்தை குறிப்பிட்டார்.

“குடும்பங்களின் நலன் நாட்டுக்கு நன்மை தரும். குடும்பத்தின் மேன்மையை உணர்ந்து அரசாங்கம் இத்தகைய ஆதரவுகளை வழங்குகிறது. வருங்காலத்தில் நீயும் உன் தங்கையும் குடும்பத் தலைவர்களாவீர்கள். உன் குடும்பத்தை என்றும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்,” என்று தந்தை அறிவுறுத்த, பார்த்திபனும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டான்.

குறிப்புச் சொற்கள்