முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு வருகைதந்த தாத்தாவோடும் பெற்றோரோடும் தேசத்தின் பிறந்தநாளைக் கொண்டாடினார் ஷ்ரேயஸ் குமார், 9.
இரு பிள்ளைகள், கணவர், தந்தை என்று ஐவர் கொண்ட குடும்பமாகக் காலாங் வட்டாரத்திற்கு ஐந்து மணி அளவில் அவர்கள் சென்றடைந்தனர்.
ஈராண்டுகளாகச் சிங்கப்பூரில் வசித்து வரும் 38 வயது ஸ்ரவந்தி தம் தந்தையை முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு அழைத்து வந்தார்.
தாத்தா 71 வயது சாத்தைய்யாவோடு சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்க ஆசைப்பட்ட சிறுவர்களுக்காகவே தேசிய தினத்தைக் கொண்டாட முழுக் குடும்பமும் கிளம்பியது.
தேசிய விளையாட்டரங்கிற்கு வெளியே நடமாடிக்கொண்டிருந்த அலங்கார பொம்மைகளோடு தாத்தாவும் பேரனும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
குறிப்பாக, ஷ்ரேயசுக்கு மிகவும் பிடித்த வாணவேடிக்கைகளைக் கண்டு ரசிக்க ஏதுவான இடமாக விளையாட்டரங்கின் ஆற்றங்கரை நடைபாதையில் இக்குடும்பம் கூடியது.
“ஒவ்வோர் ஆண்டும் வீட்டிலிருந்தே பொது விடுமுறையைக் கழிப்பது வழக்கம். ஆனால், தேசிய தினத்தை முழு நாடும் எப்படிக் கொண்டாடுகிறது என்று பிள்ளைகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளோம்,” என்றார் ஸ்ரவந்தி.
அணிவகுப்பைப் பார்க்க நுழைவுச்சீட்டுகள் கிடைக்கவில்லை என்றாலும், காலாங் வட்டாரமே துடிப்புடன் காணப்பட்டதால் அனைவரோடும் சேர்ந்து தேசிய தினத்தை உற்சாகத்தோடு அவர்கள் கொண்டாடினர்.


