சுட்டிச் செல்லங்களின் வண்ணமயமான கற்பனை உலகம்

‘ஹலோ ஃபியூச்சர்: அட்வென்ச்சர் அவெயிட்ஸ்’ கலைக் கண்காட்சி

சுட்டிச் செல்லங்களின் வண்ணமயமான கற்பனை உலகம்

2 mins read
500e548c-7fd4-4626-98fd-3dd8f5b561e0
‘ஹலோ ஃபியூச்சர்: அட்வென்ச்சர் அவெய்ட்ஸ்’ கண்காட்சி. - படம்: சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம்
Google News Preferred Icon

தஞ்சோங் பகார் டிஸ்ட்ரிபார்க்கில் அமைந்துள்ள சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தின் கற்றல் கூடத்திற்குப் பாலர் பள்ளி மாணவர்கள் அண்மையில் கல்விச்சுற்றுலா சென்றனர்.

அங்கு கண்டவற்றால் ஈர்க்கப்பட்ட அவர்கள், அற்புதமான கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.

சிங்கப்பூரர்களின் அடையாளம், சமூகம், மாறிவரும் சுற்றுச்சூழல் ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு அவர்கள் ஓவியம் தீட்டினர்.

அப்படைப்புகளைப் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரும் வகையில், சிறப்புக் கண்காட்சியொன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தின் சிறப்புத் திட்டமான ‘திங்க்! கன்டெம்பரரி ப்ரீஸ்கூல்’ (Think! Contemporary Preschool) கலைக் கல்வித் திட்டத்தின் ஏழாவது வெளியீடாக, ‘ஹலோ ஃபியூச்சர்: அட்வென்ச்சர் அவெயிட்ஸ்’ (Hello Future: Adventure Awaits) எனும் இந்தக் கண்காட்சி உருவெடுத்துள்ளது.

தேசிய நூலகக் கட்டடத்தில் முதன்முறையாக இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

‘ஹலோ ஃபியூச்சர்’ கண்காட்சியின் ஒரு பகுதியாக எம்.வை வோர்ல்ட் @ ஆங் மோ கியோ, எம்.வை வோர்ல்ட் @ பூன் கெங், எம்.வை வோர்ல்ட் @ டென்டெராம் பீக், எம்.வை வோர்ல்ட் @ தியோங் பாரு வியூ ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘ப்ளூமிங் மெமரீஸ்’ கலைப்படைப்பு.
‘ஹலோ ஃபியூச்சர்’ கண்காட்சியின் ஒரு பகுதியாக எம்.வை வோர்ல்ட் @ ஆங் மோ கியோ, எம்.வை வோர்ல்ட் @ பூன் கெங், எம்.வை வோர்ல்ட் @ டென்டெராம் பீக், எம்.வை வோர்ல்ட் @ தியோங் பாரு வியூ ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘ப்ளூமிங் மெமரீஸ்’ கலைப்படைப்பு. - படம்: சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம்

சிங்கப்பூர் முழுவதும் உள்ள 24 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த பிள்ளைகளின் வண்ணமயமான கலைப்படைப்புகளை அது காட்சிப்படுத்துகிறது.

தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதையும் அதைப் பற்றி அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் அழகாக அப்படைப்புகள் பிரதிபலிக்கின்றன.

இந்த ஆண்டு கண்காட்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, இளம்பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக்கழகத்துடனான சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகத்தின் கூட்டுப்பணி மேலும் விரிவடைந்துள்ளது.

அக்கல்விக் கழகத்தின் நுண்கலைப்பிரிவு மாணவர்கள், பாலர் பள்ளி வகுப்பறைகளில் பிள்ளைகளுடனும் ஆசிரியர்களுடனும் இணைந்து நேரடியாகப் பணியாற்றியுள்ளனர்.

நோபல்லேண்ட் ஆர்ட்ஸ் அண்ட் லேர்னிங் பிளேஸ் @ பொங்கோல் (பாலர்பள்ளி) மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘தி புக் ஆஃப் இம்பாசிபிள் கிரியேச்சர்ஸ்’ கலைப்படைப்பு.
நோபல்லேண்ட் ஆர்ட்ஸ் அண்ட் லேர்னிங் பிளேஸ் @ பொங்கோல் (பாலர்பள்ளி) மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘தி புக் ஆஃப் இம்பாசிபிள் கிரியேச்சர்ஸ்’ கலைப்படைப்பு. - படம்: சிங்கப்பூர்க் கலை அரும்பொருளகம்

பிள்ளைகளின் கலைப்படைப்புகளை உருவாக்கும் செயல்பாட்டிற்கு ஆதரவளித்ததோடு, அவர்களுக்குக் கலையைக் கற்றுக்கொடுக்கும் நல்வாய்ப்பையும் அம்மாணவர்கள் பெற்றனர்.

இளம் பிள்ளைகளின் ஆர்வம், படைப்பாற்றல் ஆகியவற்றின் வழியே கலையை அறிவதோடு, அவர்களின் வண்ணமயமான கற்பனை உலகிற்குள் நுழையவும் இந்தக் கண்காட்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்