தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கற்பனையைத் தூண்டும் இந்திய மரபுடைமை நிலையத் தீபாவளி

2 mins read
db561eac-df49-4a97-a2b0-e1c26f2a5326
அரக்கன் நரகாசுரனை கிரு‌ஷ்ணர் வீழ்த்தியது, ராவணனை ராமர் வென்றது என இரு கதைகளும் தோல் பொம்மலாட்டம் வடிவில் காட்டப்படுகின்றன.  - படம்: இந்திய மரபுடைமை நிலையம்

இந்திய மரபுடைமை நிலையத்தில் கோலாகலத் தீபாவளிக் கொண்டாட்டங்களும் பலவித சுவாரசியமான நடவடிக்கைகளும் இம்மாதம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ள உண்மையான கிளியோடு மாலை 2 முதல் 4 மணி வரையும் கிளிப் பொம்மையின் உதவியுடன் காலை 10 முதல் மாலை 5 மணி வரையும் ஜோசியம் பார்க்கலாம்.

அடுத்ததாக நீங்களே சொந்தமாக வடிவமைத்த தீபாவளி அஞ்சல் அட்டைகளை உங்கள் தாத்தா பாட்டிக்கு அனுப்பி வைக்கலாம். அதற்கான சாவடியும் அங்கு உள்ளது.

‘சிண்டா புரொஜெக்ட் கிவ்’ கண்காட்சியில், சுவாரசியமான தமிழ் எழுத்து ஜிக்சா புதிர்களைச் செய்து மகிழலாம். தமிழில் எண்களை எண்ணி, புதிய சொற்களைக் கற்று, கதைசொல்லி மகிழலாம் 

இதுபோன்ற பல விதவிதமான நடவடிக்கைகளும் இந்திய மரபுடைமை நிலையத்தில், தீபாவளியை முன்னிட்டு வார இறுதிகளில் அக்டோபர் 27ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றன.

நிலையத்தின் வெளியிலேயே பறையிசைக் கலைஞர்கள், நடனமணிகள் படைக்கும் நிகழ்ச்சிகளையும் காணலாம்.

உள்ளே நுழைந்ததும் முதல் தளத்தில் பல கைவினை நடவடிக்கைகளும் புகைப்படச் சாவடியும் உள்ளன. சிறுவர் நடவடிக்கை புத்தகத்தையும் பெறலாம்.

இரண்டாம் தளத்தில் காலை 10 முதல் 5 மணி வரை தோல் பொம்மலாட்டம் பற்றிய பத்து நிமிடக் காணொளிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இவைமூலம் தீபாவளிப் பண்டிகையின் பின்னணியைப் பற்றி சிறார்கள் அறிந்துகொள்ளலாம்.

அரக்கன் நரகாசுரனை கிரு‌ஷ்ணர் வீழ்த்தியது, ராவணனை ராமர் வென்றது ஆகிய இரு கதைகளும் தோல் பொம்மலாட்டம் வடிவில் காட்டப்படுகின்றன.

தமிழர் பண்பாட்டில் தீபாவளி வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி பல சுவையான தகவல்களை அறிந்துகொள்ளவும் தங்களுடைய திறன்களை வெளிக்காட்டவும் சிறுவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அங்கு அழைத்துச் சென்று தீபாவளி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

குறிப்புச் சொற்கள்