சிறுவர்களே, உங்களில் பலருக்கும் புதிர்களைச் செய்யப் பிடிக்கும் அல்லவா?
நீங்கள் செய்வது பெரும்பாலும் சிறு சிறு புதிர்களாக இருக்கும்.
ஆனால் ஜூலை 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று 2,025 பேர் இணைந்து பிரம்மாண்ட ஜிக்சா புதிரைச் (jigsaw puzzle) சிங்கப்பூர் எக்ஸ்போவில் செய்தனர். அன்று நடைபெற்ற பிசிஃப் (PCF) குடும்ப தினத்தின் முக்கிய அங்கமாக அது நடைபெற்றது.
ஆக அதிகமானோர் இணைந்து ஒரு புதிரைச் செய்ததற்கான சாதனையைப் படைத்துச் சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது, ‘பிசிஎஃப்’ (PCF) அமைப்பின் இம்முயற்சி. இதற்குமுன் சி யுவன் சமூக மன்றத்தில் 1,716 பேர் இணைந்து செய்த புதிர் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
அண்மைய சாதனையில் பங்கேற்ற 2,025 பேரில் பிசிஎஃப் மாணவர்கள், பெற்றோர், முதியோர், தொண்டூழியர்கள், மூத்த நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் அடங்குவர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிறுவர்களுடன் இணைந்து புதிரை நிறைவுசெய்தார். அவரைக் கண்ட களிப்பில் முதியோரும் பிள்ளைகளும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
சிங்கப்பூரின் 60வது ஆண்டுநிறைவை முன்னிட்டு இந்தச் சாதனையைப் பிசிஎஃப் படைத்தது.
இந்தப் புதிர், நாட்டின் வளர்ச்சியில் - ஆரம்பக் கல்வி முதல் துடிப்பான மூப்படைதல் வரை - பிசிஎஃப் ஆற்றியுள்ள முக்கியப் பங்கைச் சித்திரித்தது.
தொடர்புடைய செய்திகள்
பெற்றோருக்கான மாநாடு
அதேநேரம், பிசிஎஃப் பெற்றோருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் 1,200க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர். கதைசொல்லுதல், ஒயிலாட்டம், இசை வகுப்புகள், தொடக்கப்பள்ளிக்குச் செல்லும்போது கையாளவேண்டிய உத்திகள், பெரனக்கான் களிமண் கலை எனப் பல்வேறு சுவையான பயிலரங்குகளும் அம்மாநாட்டில் இடம்பெற்றன.
பல விளையாட்டுச் சாவடிகளும் இருந்தன.
கெட்ஏக்டிவ்! சிங்கப்பூர் நடத்திய விளையாட்டுகளில் மாணவர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். ‘டான்ஸ் ஆஃப் த நேஷன்’ நடன அங்கத்தில் பிரதமர், அமைச்சர்கள் உட்பட மாணவர்களும் நடனமாடி மகிழ்ந்தனர்.
மண்டாய் வனவிலங்குக் காப்பகம், இறந்துபோன விலங்குகளின் தோல், இறகுகளால் செய்யப்பட்ட காட்சிப் பொம்மைகளைக் காட்சிப்படுத்தியது. மாணவர்கள் அவற்றைக் கண்டு பரவசமடைந்தனர்.
அதோடு, அக்காலத்து ரிக்ஷா வாகனத்தில் செல்லும் வாய்ப்பையும் பெற்று மகிழ்ந்தனர்.
பிசிஎஃப் ஸ்பார்குல்டோட்ஸ் பாலர்பள்ளி மாணவர்களின் ‘ஸ்டெமி’ (STEMIE) திட்டத்தின் படைப்புகள் சில பிரதமரிடம் காட்டப்பட்டன.
கண் தெரியாதவருக்கான தண்ணீர் விநியோகிப்பான் (காந்தம், ஒலியோடு இயங்குவது), கையை வெட்டிக்கொள்ளாமல் பயன்படுத்தக்கூடியக் கத்தி, பொம்மைகளைச் சுத்தப்படுத்தக்கூடிய மறுசுழற்சி இயந்திரம், குழந்தைகளுக்கான பால் புட்டிகளை வேகமாக நிரப்பி ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் இயந்திரம் எனப் பாலர் தம் வயதுக்கு மேற்பட்ட அறிவையும் புத்தாக்கத்தையும் வெளிப்படுத்தினர். பிரதமர் அத்திட்டங்களைக் கண்டு வியந்தார்.