விளையாட்டுத்தனம் மிகுந்த விஷால், கற்பனை வளமும் மிக்கவன். ஆனால், சுற்றி நடப்பதையோ பிறரது உணர்வுகளையோ கவனிப்பதும் இல்லை, பொருட்படுத்துவதும் இல்லை!
அவனால் ஏதேனும் தவறு நிகழும்போது, ‘மன்னியுங்கள்’ என்று மட்டும் சொல்வான். ஆனால், உண்மையாகத் திருந்தாமல் செய்த தவறுகளையே தொடர்ந்து செய்துவந்தான்.
12 வயது விஷால் வசிக்கும் அடுக்குமாடி வீட்டில் செல்ல நாய்க்குட்டி ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்னதாக வாங்கப்பட்ட ‘டொஃபி’ எனும் அந்த நாய்க்குட்டியை விஷாலின் 9 வயது தங்கை நிலா பராமரிக்கிறாள்.
ஒருமுறை, தாயாருடன் பொருள்கள் வாங்கச் சென்ற விஷாலை, தாய் முதலில் வீட்டுக்குப் போகச் சொன்னார்.
“‘டொஃபி’ அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கும். தயவுசெய்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் கவனமாகக் கதவைச் சாத்திவிடு,” என்று அவர் கூறினார்.
வீட்டுக்குள் அவனது தங்கை நிலா, தான் ஆசையாக வளர்க்கும் சின்னஞ்சிறு நாய்க்குட்டியுடன் அங்கே விளையாடிக்கொண்டிருந்தாள். நாயை வரவேற்பறையில் விட்டுவிட்டு நிலா, சற்று நேரம் கழிவறைக்குச் சென்றாள்.
திறன்பேசியைப் பார்த்துக்கொண்டே கற்பனை உலகத்திலேயே மிதந்துகொண்டிருந்த விஷால், உள்ளே சென்றபோது தாயார் நினைவுபடுத்தியதை முற்றிலும் மறந்தான். விஷால் தனது அறைக்குச் சென்று, கட்டிலில் சாய்ந்தவாறே திறன்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
திடீரென்று நிலா கூச்சலிடும் சத்தம் கேட்டது. “டொஃபி எங்கே?” என்று நிலா கத்தினாள்.
வீட்டுக்கதவு திறந்திருந்தது. இருவரும் ‘டொஃபி, டொஃபி’ எனப் பலமுறை கூவிக்கொண்டு பதற்றத்துடன் வெளியே சென்றனர். நிலா பதற்றத்தில் அழவும் தொடங்கினாள்.
அவர்களது கூச்சலை இரண்டு வீடுகள் தள்ளி வசித்த 17 வயது அண்டை வீட்டுக்காரர் லோகன் கேட்டுக்கொண்டு வெளியே வந்தார். நடந்தது என்னவென்று புரிந்துகொண்டு, “விஷால், தங்கையைப் பார்த்துக்கொள். நான் தேடிப் பார்த்துவிட்டுத் திரும்புகிறேன்,” என்றார்.
கிட்டத்தட்ட ஏழு நிமிடங்கள் கழித்து, தரைத்தளத்தில் சுற்றிக்கொண்டிருந்த டொஃபியை லோகன் தூக்கிக்கொண்டு, மூன்றாவது மாடியிலுள்ள அவர்களின் வீட்டுக்குத் திரும்பினார்.
நிலா, டொஃபியை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு லோகனிடம் நன்றி கூறினாள். ஆனால், அவள் விஷாலைக் கோபித்தவாறு, “இவ்வளவு அலட்சியமா? டொஃபி சாலை விபத்தில் சிக்கியிருந்தால் என்னவாகியிருக்கும்?” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
அதனால், விஷாலின் முகம் வாடியதைக் கண்டு லோகன் ஆறுதல் வார்த்தை கூறினார்.
“தவறு செய்வது மனித இயல்புதான். ஆனால், கவனக்குறைவால் திரும்பத் திரும்ப தவறு செய்வதால் உன் மீதான பிறரது மரியாதை குறையும். நாம் செய்யும் தவறுகளுக்கு விளைவு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, பொறுமையுடனும் உணர்வுபூர்வமாகவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்,” என்றார் லோகன்.
நிலமையை உணர்ந்துகொண்ட விஷால், தான் செய்த தவறுக்காகத் தன் தங்கையிடம் மனமார மன்னிப்புக் கேட்டான். சொல்லில் மட்டுமன்றிச் செயலிலும் விஷால் தன்னைத் திருத்திக்கொண்டான். அவனிடம் பொறுப்புணர்வும் கூடியது.

