ஒன்பது வயது தனேஷ், சுறுசுறுப்பான சிறுவன். கொடுக்கப்பட்ட வேலையை நேரத்திற்குள் செய்து முடிக்கும் நல்ல பண்பு அவருக்கு உள்ளது.
ஆனாலும் சுறுசுறுப்புடன் சேர்ந்து சில நேரங்களில் படபடப்பும் ஏற்படுகிறது.
தேர்வு எழுதும் நேரத்தில் அல்லது பாடங்களை வேகமாக முடிக்கவேண்டிய சூழ்நிலையில் தனேஷின் கைகள் வியர்க்கும். இதனால் கையிலுள்ள பென்சில் சில நேரங்களில் அவரது கைகளைவிட்டு நழுவுகிறது.
இப்படி, தனேஷ் அவ்வப்போது பதற்றத்தில் தவிப்பதைக் கண்டு சிலர் அவரைக் குறைத்து மதிப்பிடுகின்றனர்.
பாடங்களைச் சரியாகப் படிக்கும் பிள்ளை, ஏளனத்திற்கு ஆளாகக் கூடாது என்ற அக்கறையில் மூத்த ஆசிரியர் ஒருவர் வகுப்பு முடிந்ததும் தனேஷை அணுகினார்.
மூத்த ஆசிரியர் அன்பானவர் என்பதால் தனேஷ் தன் பிரச்சினையை மறைக்காமல் விளக்கிக் கூறினார்.
“தேர்வு நேரத்தில் என்னை அறியாமல் என் கைகளிலிருந்து வியர்வைத் துளிகள் சொட்டும். பென்சிலை இறுகப் பிடிக்கச் சிரமப்படுவேன். இது என்னை வருந்தச் செய்கிறது,”என்றார் தனேஷ்.
இதனைக் கேட்ட ஆசிரியர், தீர்வு ஒன்றைப் பரிந்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
“கைகள் ஏதேனும் ஒரு கைவினைப் பயிற்சியைச் செய்யும்போது இந்தப் பிரச்சினை தீர்வதை நான் அறிந்துள்ளேன். நீயும் முயன்று பார். பொழுதுபோக்குக்காக லெகோ கற்களைக் கொண்டு பொருள்களை உருவாக்கிப் பார்,” என்றார் அந்த ஆசிரியர்.
கலைப்பொருள்களையும் வண்ணங்களையும் விரும்பும் தனேஷ், லெகோ கலையை ஒரு கை பார்க்க முடிவு செய்தார்.
வீட்டுப்பாடங்களுக்கும் மற்ற நடவடிக்கைகளுக்கும் இடையே அவர் இதனைச் செய்தார்.
லெகோ கற்களால் பெரிய கடல்நாகம் ஒன்றை உருவாக்கும் அளவுக்கு அவரது திறன் வளர்ந்தது.
எழுதுகோல் மட்டுமன்றி, பற்பல கருவிகளையும் கையாளும் நம்பிக்கை அவருக்கு வந்தது. பிற மாணவர்களுக்குக் கற்றுத்தரும் அளவுக்குத் திறனை வளர்த்துள்ள தனேஷ் நிதானத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்.

