இந்தியக் கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்வதோடு லிட்டில் இந்தியாவின் பழைமைவாய்ந்த வணிகங்களைப் பற்றியும் சிறார் தெரிந்துகொள்ளவேண்டும் எனும் நோக்கில் ‘டிஸ்கவர் லிட்டில் இந்தியா: எ கிட்ஸ் சென்சரி அட்வென்ச்சர்’ (Discover Little India: A Kids’ Sensory Adventure) எனும் பயிலரங்கு அண்மையில் நடந்தேறியது.
லிட்டில் இந்தியா சாலை விழாவின் ஓர் அங்கமாக, உள்ளூர் ஆடை விற்பனையில் ஈடுபட்டு வரும் ‘ஷர்வா’வும் ‘இண்டஸ் கலெக்ட்டிவ்’வும் இணைந்து அந்தப் பயிலரங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தன.
தொட்டுப் பார்த்து உணரவேண்டும்
கேம்பல் லேன், டன்லப் தெரு, சிராங்கூன் சாலை ஆகிய சாலைகளில் இயங்கிவந்த முக்கிய வணிகங்களை அடிப்படையாகக் கொண்டு மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்பட்டு, அப்பயிலரங்கு நடத்தப்பட்டது.
“பூத்தொடுத்தல், மசாலாப் பொருள்கள், துணி வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் அச்சுகள் போன்றவை நம் இந்தியக் கலாசாரத்தோடு பின்னிப்பிணைந்துள்ளன. ஆனால், அவற்றைப் பற்றி பிள்ளைகளிடம் எடுத்துரைக்கும்போது, அவர்கள் அதில் பெரிதும் ஆர்வம் காட்டமாட்டார்கள்,” என்று சொன்னார் பயிலரங்கின் ஏற்பாட்டாளர் சர்வேஷ் செல்வராஜு .
ஆகவே, குழந்தைகளுக்குக் களிநயமான வழியில், அவர்களுடைய ஐம்புலன்களையும் பயன்படுத்தி, இந்தியக் கலாசாரத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பயிலரங்கின் ஒரு பங்காளியாக இணைந்த கார்த்திகா பல்பொருள் அங்காடி, குழந்தைகளுக்கு மசாலாப் பொருள்களைப் பற்றி விளக்கியதோடு, நறுமணத்தைக் கொண்டு எவ்வாறு அவற்றைக் கண்டறிவது என்பதையும் கற்றுத்தந்தது.
“பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் லிட்டில் இந்தியாவை அழகுபடுத்தவும் மக்களிடம் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தவும் மயில் அல்லது யானை வடிவில் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்படும். ஆனால், குறிப்பிட்ட அந்த வடிவங்களை ஏன் பயன்படுத்துகிறோம் என்ற கேள்வி, குழந்தைகள் உட்பட, பலரிடையே இருக்கலாம்,” என்றார் ‘ஷர்வா’ உரிமையாளர் வைஷ்ணவி, 36.
ஆகவே, அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கும் நோக்கில், இந்தியக் கலாசாரத்திற்கும் அத்தகைய வடிவங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி குழந்தைகளுக்கு அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார். பின்பு, அந்த வடிவங்களில் இருந்த அச்சுகளைக் கொண்டு குழந்தைகள் தங்களுடைய பைகளில் பதித்தனர்.
ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை வழங்கிய பூக்களைக் கொண்டு, அவற்றை எவ்வாறு கோப்பது, சிங்கப்பூரில் பல்லாண்டுகாலமாக நீடித்து வரும் பூத்தொழில் உள்ளிட்டவற்றைப் பற்றியும் பயிலரங்கு கற்றுகொடுத்தது.
சற்று வழிகாட்டுதலுடன், ஊசியை பூவிற்குள் தாமாக நுழைத்து, பூமாலையைத் தொடுத்தது தமக்குப் புதிய அனுபவமாக இருந்ததாக நான்கு வயதுச் சிறுவன் மேக்ஸ் சியா கூறினார்.
பயிலரங்கிற்கு மேக்ஸையும் அவருடைய அக்கா மே சியாவையும் அழைத்து வந்திருந்தார் அவர்களின் தாயார் லியூ இ-வென்.
காப்பீட்டு நிபுணராகப் பணிபுரியும் அவர், இந்தியக் கலாசாரத்தைப் பற்றித் தம்முடைய குழந்தைகள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவர்களைப் பயிலரங்கிற்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.
அச்சுப் பதித்தல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஐந்து வயதுச் சிறுமி ஆர்யா சர்வேஷ், “நான் மயில், பசு, மிதிவண்டி வடிவங்களைப் பயன்படுத்தி கரிக்கோல் பையைத் தயாரித்தேன். மயில் என்பது இந்தியக் கலாசாரத்தின் அடையாளம் என்பதையும் தெரிந்துகொண்டேன்,” என்று கூறினார்.
ஏறத்தாழ 32 சிறார் கலந்துகொண்ட அந்தப் பயிலரங்கு, சிறாருக்குத் தொடுதல், பார்த்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல் ஆகிய ஐம்புலன்கள் வழியாக லிட்டில் இந்தியாவின் வரலாற்றுப் பெருமையையும் இந்தியக் கலாசாரத்தின் சிறப்பையும் எடுத்துரைக்கும் தளமாக அமைந்தது.


