மேடையில் அசத்திய சுட்டிக்குரல்

மேடையில் அசத்திய சுட்டிக்குரல்

1 of 2
படம்: விக்னேஷ்
படம்: த. கவி

20 Apr 2026 - 5:43 pm

1 mins read

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கலை மையத்தில் (NUS University Cultural Centre Theatre) கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ‘ரி-இன்கார்னே‌‌ஷன்’ இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவைக் காணவந்த அனைவரது பார்வையும் பாலர்பள்ளியில் பயிலும் அக்‌ஷரா கௌஷிக்மீது தான் இருந்தது.

கடந்த ஈராண்டுகளாகச் சங்கீதம் பயின்று வரும் அக்‌ஷரா, இந்த மேடைக்காகக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டார்.

அந்த உழைப்பிற்குக் கிடைத்த பலனாக, பாரதியாரின் புகழ்பெற்ற ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலை மிக அழகாகப் பாடி பார்வையாளர்களை அவர் மெய்சிலிர்க்க வைத்தார்.

கிட்டத்தட்ட 400 பார்வையாளர்கள் கூடியிருந்த அரங்கில் அக்‌ஷரா மிகவும் தன்னம்பிக்கையுடன் பாடினார்.

தனது மேடை அனுபவம் குறித்து பேசிய அக்‌ஷரா, “பார்வையாளர்கள் நிறைந்த மேடையில் பாட எனக்குப் பயமாக இல்லை. ஏனென்றால், நான் ஏற்கெனவே பலமுறை மேடைகளில் பாடியிருக்கிறேன்,” என மிகுந்த உற்சாகத்துடன் கூறினார்.

அவரின் இந்தத் திறமையை அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

அக்‌ஷராவின் பள்ளி ஆசிரியர்களும் நண்பர்களும் நேரில் வந்து அந்த நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர்.

தமது பள்ளி ஆசிரியர்களும் நண்பர்களும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தது தமக்குப் பெரிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது என மழலை மாறாமல் நெகிழ்ச்சியுடன் அக்‌ஷரா கூறினார்.

எதிர்காலத்தில் ஒரு சிறந்த கலைஞராகவும் பள்ளி ஆசிரியராகவும் வரவேண்டும் என்பதே இந்தச் சுட்டிப் பெண்ணின் கனவு.

குறிப்புச் சொற்கள்