லிட்டில் இந்தியாவில் மாட்டுப் பொங்கல் விழா

2 mins read
67aa436b-e484-4fd7-bc9d-2e1f44b05c2b
வண்ண அலங்காரங்களுடன் தென்பட்ட கால்நடைகள். - படம்: லாவண்யா வீரராகவன்

விவசாயத்திலும் பால் உற்பத்தியிலும் முக்கியப் பங்கு வகிக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் லிட்டில் இந்தியாவில் மாட்டுப் பொங்கல் விழா நடைபெற்றது.

பொங்கல் விழாவின் அங்கமாக வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல் தினத்தன்று அவற்றுக்குப் பொங்கல் வைத்துப் படைத்து, நன்றி தெரிவிக்கப்பட்டது.

கால்நடைகளுடன் மாணவி யாழினி.
கால்நடைகளுடன் மாணவி யாழினி. - படம்: லி‌‌‌ஷா

தேக்கா வட்டாரத்தின் கிளைவ் ஸ்திரீட்டில் உள்ள ‘பொலி’ வளாகத்தில் அமைந்த கூடாரத்தில் இவ்விழா நடைபெற்றது.

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடமை சங்கம் (லி‌‌‌ஷா), விக்னே‌ஷ் பால் பண்ணை இணைந்து ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் விழாவைக் கொண்டாடுகின்றன. அதேபோல இவ்வாண்டும் கோலாகலமாகக் கொண்டாட்டங்கள் நடந்தேறின.

மாடுகளுக்குப் பட்டுப் பரிவட்டங்கள் கட்டப்பட்டிருந்தன. மலர் அலங்காரங்கள், சந்தன, குங்குமப் பொட்டுகளுடன் மாடுகள் வண்ணமயமாகக் காட்சியளித்தன.

வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் பொங்கல் வைத்து, அதன்பின் வழிபாடுகளும் நடைபெற்றன. பங்கேற்ற அனைவரும் மாடுகளுக்குப் பூப்போட்டு வழிபட்டனர்.

(இடமிருந்து) மாணவர்கள் ருத்ரா, லோகந்த், திலன், ஓங்காரா.
(இடமிருந்து) மாணவர்கள் ருத்ரா, லோகந்த், திலன், ஓங்காரா. - படம்: லாவண்யா வீரராகவன்

நிகழ்ச்சியில் பங்கேற்ற தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவி யாழினி, “எனது தந்தையுடன் மாடுகளைப் பார்க்க வந்தேன். ஆண்டுதோறும் வருகிறேன். மாடுகளுக்கு நன்றி சொல்ல வந்ததில் மகிழ்ச்சி,” என்றார்.

“மாடுகள் நமக்கு உதவுகின்றன. அவற்றைக் கொண்டாட வேண்டும் என்று எனது தாயார் கூறினார். அதற்காக வந்துள்ளோம்,” என்றார் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் பயிலும் ஓங்காரா, 6.

“இன்று மாட்டுப் பொங்கல் என்பதால் அவற்றுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எனக்கு மாடுகள் என்றால் பிடிக்கும். மாடுகள் பால் தருகின்றன. நாம் விதவிதமான பால் பொருள்களைச் சுவைக்கிறோம். அதற்கு மாடுகளுக்கு நன்றி சொல்லவேண்டும்,” என்றார் தொடக்கநிலை ஐந்து மாணவர் திலன், 10.

பொங்கலன்று சூரியனையும், மாட்டுப் பொங்கலன்று அனைத்துக் கால்நடைகளையும் கொண்டாட வேண்டும். இங்கு வந்து ஆடு மாடுகளையும், மக்கள் பலரையும் பார்த்ததில் மகிழ்ச்சி,” என்றார் தொடக்கநிலை ஒன்றில் பயிலும் மாணவர் லோகந்த், 6.

“மாடுகள் பார்க்க அழகாக உள்ளன. அவற்றுக்கு அருகில் சென்று பார்க்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. இது புதுமையாக உள்ளது,” என்றார் மாணவர் ருத்ரா, 4.

குறிப்புச் சொற்கள்