குமரவேலு கமலசிவாணி
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் தோன்றிய தோல்பாவைக் கூத்து எனும் பாரம்பரியக் கலை இன்றைய இருபத்தியொன்றாம் நூற்றாண்டுக்கும் பொருத்தமாகவே இருக்கிறது என்று ‘கதை கேளு கதை கேளு, பாவை சொல்லும் கதை’ எனும் நிகழ்ச்சி நிரூபித்தது.
‘ஈடுபாடு’ என்ற இந்த ஆண்டு தமிழ்மொழி மாதத்தின் கருப்பொருளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களைப் பாரம்பரியக் கலையில் ஈடுபடுத்தும் வகையில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது.
லிஷா இலக்கிய மன்றமும், உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் அந்நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை (19 ஏப்ரல்) நடத்தின.
கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டன. சிறப்பு விருந்தினராக உட்லண்ட்ஸ் அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திருவாட்டி மரியம் ஜாஃபர் வந்திருந்தார்.
மலாய் சமூகத்திலும் தோல்பாவைக் கூத்தைப் போலவே ‘வாயாங் கூலிட்’ என்ற கலை வடிவம் இருப்பதாக அவர் பகிர்ந்தார்.
“நமது கலை வடிவங்களிடையேயும், நமக்கிடையேயும் உள்ள வேறுபாடுகளை மதித்து அவ்வேறுபாடுகளில் ஒற்றுமையைக் காண்பது சிங்கப்பூரின் அழகு. அக்கண்ணோட்டத்தில் மாணவர்களைச் சிறுவயதிலிருந்தே ஈடுபடுத்துவது அவசியமாகும்,” என அவர் சொன்னார்.
தோல்பாவைக் கூத்து இன்றைய இளையர் சமூகம் அதிகம் எதிர்நோக்கும் தொலைபேசி அடிமைத்தனத்தை மையப்படுத்தி இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
தொலைபேசியை அளவுக்கு மீறி பயன்படுத்துதல் எப்படி ஒருவரைப் பாதிக்கும் என அது சித்திரித்தது.
எப்படி அதிகத் தொலைபேசிப் பயன்பாடு, பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களிடையே விரிசலை ஏற்படுத்துகிறது, முக்கியமானவற்றைப் புறக்கணிக்கவும், பொன்னான நேரத்தை வீணடிக்கவும் ஒருவரைத் தூண்டுகிறது, எப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரின் பழக்க வழக்கங்களை மாற்றி அவரை ஆட்டிப்படைக்கிறது போன்ற பாதிப்புகளைப் பற்றி அக்கூத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
சித்திரிக்கப்பட்ட கருத்து ஆழமான ஒன்றாக இருந்தாலும் பலரும் சிரித்துக்கொண்டும் கைத்தட்டிக்கொண்டிருந்தும் காணப்பட்டனர்.
அதற்கு நகைச்சுவையான கதைவசனங்களும், அதற்கிடையே வந்த இசையும் பாடல்களுமே காரணமாகும். பலரும் பாடலின் தாளத்திற்கு ஏற்ப கைதட்டிக்கொண்டு காணப்பட்டனர்.
கிரீன்வுட் தொடக்கப்பள்ளியில் படிக்கும் சுதிக்ஷா கோபி, 11,
“தோல்பாவைக் கூத்து பற்றி நான் இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. அதனால் தான் எனது ஆர்வத்தை அது தூண்டியது. அக்கூத்தில் பங்கேற்ற அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது,” என கூறினார். அவர் அக்கூத்தில் ஒரு கதாபாத்திரமாக நடித்தார்.
“தோல்பாவைக் கூத்து என்பது அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கலை. அடுத்த தலைமுறையினருக்கு அதை எடுத்துச் செல்ல வேண்டுமென்றால், அக்கலையைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்களை அதில் ஈடுபடுத்துவது அவசியமாகும்,” என மாணவர்களுக்கு தமிழகத்திலிருந்து பயிற்சியளிக்க வந்திருந்த கலைமாமணி முத்துச்சந்திரன், 50, சொன்னார்.
“இந்தக் காலகட்டத்தில் மாணவர்கள் தொலைபேசியிலும் சமூக ஊடகங்களிலும் மிக அதிகமான நேரத்தைச் செலவு செய்கிறார்கள். அதைத் தவிர்த்து பொழுதுபோக்கிற்காக வேறு வழியை அறிமுகப்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும். அது மட்டுமல்ல, பாவைக்கூத்து முழுக்க முழுக்க திரைக்குப் பின்னால் இயங்கக்கூடிய கலை வடிவம். அங்கீகாரம் என்பது நம் மக்களுக்கு தெரிந்தால் தான் கிடைக்கும் என்ற சிந்தனையை சவால் செய்து, திறமை இருந்தால் அங்கீகாரம் என்பது தானாகத் தேடி வரும் என்ற முக்கிய படிப்பினையையும் சிறு வயதிலிருந்தே மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதும் இம்முயற்சியின் நோக்கமாகும்,” என்று லிஷா இலக்கிய மன்றச் செயலாளர் தமீம் அன்சாரி தெரிவித்தார்.


