மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்
வழக்கநிலைத் தேர்வில் சிறந்த தேர்ச்சி இல்லாத மாணவரும் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் ஆசிரியர் நூர்மனிஷா சர்மணி, 43.
ஏறத்தாழ 22 ஆண்டுகால அனுபவத்துடன் தொடக்கநிலைப் பிரிவில் இவ்வாண்டுக்கான நல்லாசிரியர் விருது வென்றுள்ளார் இவர். 2004 முதல், வெஸ்ட் வியூ தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் இவர் தமது பள்ளிக்காலத்தை நினைவுகூர்ந்தார்.
“பள்ளியில் சிறந்து விளங்க முடியாமல் போனதால் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்தேன். அங்குப் பிறந்த உத்வேகம் என்னை ஆசிரியராவதற்கான பாதைக்கு இட்டுச்சென்றது,” என்றார் அவர்.
“மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக, வழிகாட்டியாக அமைய வேண்டுமென்கிற எண்ணத்தில் மீண்டும் சாதாரண நிலைத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து ஆசிரியர் பயிற்சியிலும் ஈடுபட்டேன். தற்போது சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் பட்டக்கல்வி பயில்கிறேன்,” என்றார் ஆசிரியர் நூர்மனிஷா.
வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஆர்வமே போதுமானது என்பதை உணர்த்துவது தமது எண்ணம் என்றார் இவர்.
செயற்கை நுண்ணறிவு குறித்து தெரிந்துகொள்வதிலும் அதைப் பிறரிடம் பகிர்வதிலும் பேரார்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிறு சிறு விளையாட்டுகள் மூலம் எழுத்துப் பயிற்சியளிப்பது, ‘டெட் டாக்’ (Ted Talk) பாணியில் தமிழில் பேசப் பயிற்றுவிப்பது எனப் பல நடவடிக்கைகளிலும் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறார் இவர்.
“தொடக்கத்தில் கல்வியில் சிறக்காத பெண், பின் படித்து ஆசிரியராக மாறி, நல்லாசிரியர் விருதுபெற முடியுமென்றால் அனைவராலும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவதில் பெருமை,” என்று பகிர்ந்தார் நூர்மனிஷா.
தொடர்புடைய செய்திகள்
“பல சிறந்த மாணவர்களை உருவாக்கியுள்ளேன் என்பது மனநிறைவாக உள்ளது. இவ்விருதை நன்றியுடன் ஏற்கிறேன். என் பணி மேலும் சிறக்கும் என நம்புகிறேன்,” என்று ஆசிரியை நூர்மனிஷா சொன்னார்.
மாணவர் வழியிலேயே சென்று உதவுபவர்
பல்வேறு குடும்பப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களின் சிரமங்களை அறிந்து, அவர்கள் வழியிலேயே சென்று அவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ஜெமின் தொடக்கப்பள்ளி ஆசிரியை அ.காயத்ரி, 37.
“தமிழ் பேசிப் புழங்கும் குடும்பத்திலிருந்து வந்ததால் எனக்கு பள்ளிக்காலத்தில் தமிழ் மொழி மீது ஆர்வம் அதிகம் இருந்தது. அதனால் பாடம் எளிதாகத் தெரிந்தது. சிறப்பாகச் செயலாற்ற முடிந்தது.
“அதனால், என் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதே எனக்கு முதல் கடமை,” என்றார் அவர். வகுப்புகளை ஒரே பாணியில் நடத்தாமல், இருவழித் தொடர்புகளுடன் கூடுமானவரை அவர்களை ஈடுபடுத்துவதாகவும் தெரிவித்தார் காயத்ரி.
கடந்த 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், “மாணவர்கள் தங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் பகிர்வதற்கு இயல்பான தளம் அமைத்துக் கொடுத்துள்ளேன். சந்தேகம் ஏற்பட்டால் என்னை அணுகுவதற்கு தட்டச்சு செய்வதில் சிரமம் இருந்தாலும், குரல் பதிவாக அனுப்பக் கூறுகிறேன். அவர்களுக்கு விளங்கும்படி எளிதான பதில்களைத் தருகிறேன்,” என்றார்.
மாணவர் கற்றல் தளத்தை அதிகம் பயன்படுத்துவதாகவும் இவர் சொன்னார்.
பிள்ளைகள் தற்காலத்தில் அதிகம் பயன்படுத்தும் ‘காஹூட்’ உள்ளிட்ட இணையவழி விளையாட்டுகள், ‘கிளாஸ் பாயிண்ட்’ ஆகியவற்றைப் பயன்படுத்தி கற்பித்தல் அனுபவங்களை மேம்படுத்துவதாகவும் சொன்னார்.
தற்கால மாணவர்கள் பாராட்டையும் அங்கீகாரத்தையும் விரும்புகிறார்கள். அதனால் ஊக்கம் பெறுகிறார்கள் என்பதை நன்கு கவனித்து வந்துள்ள ஆசிரியை காயத்ரி, சிறந்த போட்டி மனப்பான்மையை விதைப்பது, மதிப்பெண்கள், புள்ளிகள் அளித்து ஊக்குவிப்பது உள்ளிட்டவற்றிலும் ஈடுபடுவதாகக் கூறினார்.
தமக்கு விருது கிடைத்துள்ளது அங்கீகாரமும் மனமகிழ்ச்சியும் அளிப்பதாகக் கூறிய இவர், பள்ளி, சக ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் என அனைவரது கூட்டு முயற்சியும் இதில் அடங்கியுள்ளது என்றும் சொன்னார்.

