‘ராமுவின் அழகிய தோட்டம்’ நூல் தொடர் ஏப்ரல் 5ஆம் தேதி வெளிவந்தது. இந்த நூல் தொடரை எழுதியவர் திரு காஜார் முகமது இக்பால்.
இந்த தொடரில் மூன்று புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
தேக்காவில் ராமு
முதல் புத்தகத்தின் தலைப்பு “தேக்காவில் ராமு”. கதையின் நாயகன் ராமு தன் குடும்பத்துடன் லிட்டில் இந்தியாவுக்குச் செல்கிறான். லிட்டில் இந்தியாவின் ஈரச்சந்தையில் மீன், கோழி, காய்கறிகள் வாங்கினர்.
காய்கறி வாங்கும் சமயத்தில் ஏன் காய்கறிகளை வளர்க்கக்கூடாது என்று யோசித்தான் ராமு. இதனால் தன் குடும்பத்துடன் உணவருந்திவிட்டு செடிகள் விற்கும் கடைக்குச் சென்றார்கள்.
செம்பருத்தி, மிளகாய், புதினா, ரோஜா என நான்கு செடிகளை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு எடுத்துச் சென்றான்!
வீட்டுக்குச் சென்றதும் தன் நண்பன் முரளியிடம் தான் வாங்கிய செடிகளைக் காட்டினான் ராமு. அப்பாவின் உதவியால் செடிகளை நட்டு அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றி மகிழ்ந்தான்.
வாடியது செடிகள்!
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது புத்தகத்தில் ராமுவின் செம்பருத்திச் செடியில் ஒரு செம்பருத்தி மலர் பூத்தது. ஆனால் இரண்டு நாள்களில் அந்த மலர் வாடி கீழே விழுந்தது. ராமுவின் முகமும் வாடியது.
தொடர்ந்து அவன் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி வந்தான். இருப்பினும் இரண்டு வாரங்கள் கழித்து செடிகள் வாடிய நிலையில் காணப்பட்டன.
தன் பெற்றோரின் ஆலோசனைப்படி செடி வளர்க்கும் பண்ணைக்குச் சென்றான் ராமு. அங்கே திரு மாதவனைச் சந்தித்தான்.
செடிகள் ஏன் வாடியுள்ளன, அவற்றுக்கு எவ்வாறு புத்துயிர் அளிக்கலாம் என்பதை ராமு அறிந்துகொண்டான்.
தன் செடிகளுக்குத் தேவையான உரம் வாங்கினான். அத்துடன் கூடுதலாக விதை, செடிகளையும் வாங்கினான்.
திரு மாதவன் அளித்த அறிவுரையைப் பின்பற்றிய ராமு சில வாரங்கள் கழித்து அதன் பலனை அனுபவித்தான் - தன் வீட்டில் அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கி நறுமணம் வீசியது!
ராமுவின் பிறந்தநாள்!
ராமுவின் பிறந்தநாளை முன்னிட்டு ராமுவின் பாட்டி வீட்டுக்கு வருகிறார். ராமுவின் அழகான தோட்டத்தைப் பாராட்டிய பாட்டி, சில செம்பருத்தி மலர்களால் தேநீர் ஒன்றைத் தயாரித்தார்.
தன் பிறந்தநாள் அன்று, ராமு தன் தோட்டத்திலிருந்து பறித்த மிளகாய், செம்பருத்தியைப் பயன்படுத்தி தயாரித்த உணவு, பானங்களை தன் நண்பர்களுக்கு பரிமாறினான்.
மேலும், தன் நண்பர்களுக்கு ஒரு சிறப்பு அன்பளிப்பையும் வழங்கினான். அதில் செடிகள் வளர்க்க பயன்படும் கருவிகள், விதை பொட்டலங்கள் இருந்தன.
ஒரு மாதத்துக்குப் பிறகு தன் நண்பர்கள் வீட்டுக்குச் சென்ற ராமு, அவர்கள் வளர்த்த செடிகளைக் கண்டு மகிழ்ந்தான்!