பள்ளியில் காற்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. அதற்காக அணிகள் தயாராகின்றன. இருப்பினும், இளம் விளையாட்டாளர்களிடையே சில சவால்கள் எழுகின்றன.
குழுப்பணி, ஒற்றுமை, ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதன் மூலம் மாணவர்கள் எவ்வாறு போட்டியில் வெற்றிபெறுகின்றனர் என்பதுதான் ‘கோல்! - குழுப்பணியின் வெற்றி’ எனும் சிறுவர் நூலின் மூலக்கதையாகும்.
தன் மகன்களை அடிப்படையாகக் கொண்டு கதையின் கதாபாத்திரங்களை உருவாக்கியதாக நூல் ஆசிரியர் விக்னேஸ்வரி ராஜூ, 40, தெரிவித்தார்.
பிள்ளைகள் பலர் தங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு விளையாட்டு காற்பந்து என அந்த விளையாட்டைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து அவர் விவரித்தார்.
“ஒவ்வொரு கட்டத்திலும் எனது இரு மகன்களிடம் கருத்துகளைக் கேட்பேன். அவர்கள் அந்த முழுச் செயல்முறையிலும் ஓர் அங்கமாக இருந்தனர்,” என்றார் அவர்.
‘கோல்! - குழுப்பணியின் வெற்றி’ நூல், கடந்த ஜூலை மாதம் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் நடைபெற்ற வேளையில் தேசிய நூலக வாரிய வளாகத்தில் வெளியிடப்பட்டது.
தான் ஒருவராக முழு நூலையும் வெளியிட விக்னேஸ்வரிக்கு ஓராண்டு காலம் எடுத்தது.
குழந்தைகள் ஒரு கதையுடன் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ளும்போது, அதை மேலும் படிக்க அவர்கள் இயல்பாகவே உற்சாகமடைகின்றனர் என்று விக்னேஸ்வரி கூறினார்.
எனவே, இந்த நூல் முழுக்க முழுக்க சிங்கப்பூர்ச் சூழலில் அமைய வேண்டும் என்று நான் விரும்பினேன் என்றார் அவர்.
2024ஆம் ஆண்டில் இதற்கு முன்பு ஓர் ஆங்கிலச் சிறுவர் புத்தகத்தை மட்டுமே எழுதியிருந்த விக்னேஸ்வரி, நீண்ட காலத்துக்குப் பிறகு தமிழில் எழுதுவதில் சவாலை எதிர்கொண்டார்.
“என் உயர்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர் எனக்குப் பேருதவியாக இருந்தார்,” என அவர் தெரிவித்தார்.
நூலில் இடம்பெறும் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு விழுமியங்களைக் கொண்ட மேலும் பல கதைகளை எழுத விக்னேஸ்வரி விரும்புகிறார்.


