சிறுவர்களே, நீங்கள் நலந்தரும், ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உண்கிறீர்களா? உணவுகளில் காய்கறிகளை சேர்த்துக்கொள்கிறீர்களா?
உடலும் மனமும் நன்கு வளர்ச்சியடைய நல உணவு மிகவும் அவசியம்.
சிறுவயதிலிருந்து நல உணவுகளை உண்டால்தான் எதிர்காலத்திலும் நீங்கள் நல்ல உடல், மனநலத்துடன் இருப்பீர்கள்.
உங்கள் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளில் உங்களுக்கும் பங்கு உண்டு! பேரங்காடிகளுக்குச் செல்லும்போது உங்கள் பெற்றோரிடம் நீங்களே நல உணவுகளைச் சுட்டிக் காட்டலாம்.
சமையலறையில் உங்கள் பெற்றோருக்கு உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுத்துக்கூட நீங்கள் உதவலாம். அப்போது உங்கள் அறிவியல், கணிதம், நலம், பொது அறிவு அனைத்தும் மேம்படும்.
பெற்றோர் சத்துள்ள உணவை உண்ணச் சொன்னால், உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக ஒதுக்கிவிடாதீர்கள். நாவின் சுவையைவிட உடல்நலமே முக்கியம்!
நல உணவு என்றால் என்ன?
பழங்கள், காய்கறிகளில் அதிக ஊட்டச்சத்துகள், நார்ச்சத்து, கனிமங்கள் உள்ளன. அவற்றை உண்பதால் புற்றுநோய், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற பல நோய்கள் நம்மைத் தாக்காமல் நம் உடல்நலத்தைப் பேணலாம்.
முழுக் கோதுமை ரொட்டி (Wholemeal Bread), கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், போன்றவை வெள்ளை அரிசியைவிட சத்தானவை.
தொடர்புடைய செய்திகள்
கால்சியம் என்பது வலுவான எலும்புகளுக்கும் பற்களுக்கும் அவசியம். பால், பாலாடைக்கட்டி (cheese), தயிர், கீரைவகைகள், மீன் போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.
சீனி, உப்பு அளவாக உட்கொள்ளுங்கள். அதிகச் சீனி பற்களுக்கு நல்லதன்று. அதிக உப்பு ரத்த அழுத்தத்துக்கு நல்லதன்று.
‘நண்பகல் உணவுக்கு என்ன? பண்ணை சாகசம்’ உணவுச் சந்தை
பிப்ரவரி 22ஆம் தேதி ‘ஃபோர்ட் கேனிங்’ பூங்காவில் நடந்த உணவுச் சந்தையில், சிறுவர்களே விதவிதமான, வண்ணமயமான நல உணவுகளைத் தேர்ந்தெடுத்து மகிழ்ந்தனர்.
அவர்கள் காய்கறி, பழ வடிவங்கள் கொண்ட கைவினை நடவடிக்கைகளில் பங்கேற்றனர். குழு விளையாட்டிலும் ஈடுபட்டனர்.
மொத்தம் 600க்கும் மேற்பட்ட சிறுவர்களும் பெற்றோரும் கலந்துகொண்டனர்.
சிறுவரோடு சிறுவராய் சமூக, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
எதை முன்னிட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டது?
2020ல் தொடங்கப்பட்ட ‘கிட்ஸ்டார்ட் உடன் நலம்’ (Healthy with KidSTART) எனும் சிறுவர் ஊட்டச்சத்துத் திட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டமே இந்நிகழ்ச்சி.
குறைந்த வருமானக் குடும்பங்களில் ஆறு வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டம்வழி, அக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் காய்கறி, பழப் பைகள் விநியோகிக்கப்படுகின்றன.
சமையல் நிகழ்ச்சிகள், உணவுக் குறிப்புகள்மூலம், குறைந்த செலவில் நல உணவுகளைத் தயாரிக்கவும் குடும்பத்தினர் தெரிந்துகொள்கின்றனர்.
2024ல் 3,100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்திட்டத்தால் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தை ‘கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர்’, ‘புருடென்ஷியல்’ சிங்கப்பூர்’ இணைந்து வழங்குகின்றன.
சிறுவர்களுக்கான நல உணவுகளை எப்படி சமைப்பது என அறிய ‘மதிய உணவுக்கு என்ன?’ காணொளித் தொடரை https://www.youtube.com/watch?v=OOCDItrs4Bc இணையத்தளத்தில் காணலாம்.
அதனால், சிறுவர்களே, என்றும் மறவாதீர்கள். நம் நலம் நம் கையில்!