தொலைக்காட்சியையும் திறன்பேசிகளையும் பார்த்துக்கொண்டிருப்பதைவிட விளையாட்டின் மூலம் தமிழைக் கற்கலாம்.
பிள்ளைகள் வண்ணங்கள்வழி விளையாடி மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்றரை வயது மகள் இயலிசைக்காக அழகான கற்றல் கருவிகளை அவரது தாயும் தந்தையும் உருவாக்கித் தந்தனர்.
தாயார் சிகா நர்ஷிகாவும் தந்தை மணி பூவரசும் ‘இயல்தமிழ்’ என்ற திட்டத்தின்கீழ், அரிய விளையாட்டுப் பொருள்களை உருவாக்குகின்றனர்.
வண்ணம் தீட்டும் கருவிகள்வழி பண்பாட்டையும் மொழியையும் கற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
இந்தக் குடும்பத்தினருக்குப் புதிய மொழிகளைக் கற்பதில் ஆர்வம் அதிகம்.
“எனக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகள் தெரியும். என் மனைவிக்கும் ஐந்து மொழிகள் தெரியும். நாங்கள் மாண்டரின் மொழியையும் கற்கவுள்ளோம்,” என்றார் திரு பூவரசு.
தங்களுக்குத் தெரிந்த மொழிகளை மகளுக்குக் கற்றுக்கொடுக்க முயன்றபோது, சிறு குழந்தைகளுக்கு மொழியை எளிமையாகவும் ஆர்வத்துடனும் சொல்லிக்கொடுக்க சரியான விளையாட்டுப் பொருள் தேவை என்பதை அவர்கள் உணர்ந்தனர்.
அந்தக் குறையைப் போக்கவே ‘இயல்தமிழ் ஹப்’ (IyalTamilHub) பிறந்தது. “மனப்பாடம் செய்யாமல் விளையாடிக்கொண்டே இயற்கையாகத் தமிழைப் புரிந்துகொள்ள முடியும் என்பதை இந்தத் திட்டம் காட்டுகிறது,” என்றார் தந்தை பூவரசு.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு பிள்ளையும் தமக்குத் தகுந்த வேகத்தில் கற்கின்றனர். அதனால், அவர்களை வற்புறுத்தாமல் அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்பக் கற்றுக்கொடுப்பதே சிறந்த வழி என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு முழுவதும் பல புதிய தமிழ் விளையாட்டுப் பொருள்களை அறிமுகம் செய்யவுள்ளனர்.
அதுமட்டுமன்றி, பிள்ளைகளை இயற்கையான இடங்களுக்கு அழைத்துச் சென்று, மரம், செடி, கொடிகளுக்கு நடுவே விளையாடிக்கொண்டே தமிழில் பேச வைக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழ் கற்பது இனி ஒரு பாடமாக இல்லாமல் இனிமையான அனுபவமாக மாறும் என்பது அவர்களின் நம்பிக்கை.

