வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிறாருக்குக் கட்டணம் இல்லாமல் அவர்களின் பெற்றோருடன் வனவிலங்குப் பூங்காக்களைச் சுற்றிப்பார்க்க ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
தேசிய சமூக சேவை மன்றத்தின் நன்கொடை அமைப்பான சமூக உண்டியலும் மண்டாய் வனவிலங்குக் குழுமமும் இணைந்து அதை வழங்கவுள்ளன.
சமூக சேவை அமைப்புகள் மூலம் ஆண்டுதோறும் 50,000 இலவச நுழைவுச்சீட்டுகள் வரை தரப்படும்.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம், நைட் சஃபாரி, ரிவர் வொண்டர்ஸ், பேர்டு பாரடைஸ், இவ்வாண்டு திறக்கப்பட்ட ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஆசியா ஆகிய ஐந்து மண்டாய் வனவிலங்குப் பூங்காக்களில் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விலங்குகள் உள்ளன.
கர்ஜிக்கும் சிங்கங்கள், வண்ணமயமான கிளிகள், வானத்தை எட்டும் உயரத்தில் இருக்கும் ஒட்டகச்சிவிங்கிகள், துள்ளித் திரியும் குரங்குகள் எனப் பல்வேறு விலங்குகளை நேரில் பார்த்து ரசிக்க சிறாருக்கு இது ஒரு சிறப்பான வாய்ப்பு.
விலங்குகளை நேரில் பார்த்து, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு மகிழ இந்த புதிய திட்டம் உதவும்.
“விலங்கியல் தோட்டத்துக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகள் குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துவதுடன், எதிர்காலத்தில் வலுவான சமூகத்தை உருவாக்கவும் உதவுகின்றன,” என்றார் சமூக உண்டியலின் நிர்வாக இயக்குநர் ஜாக் லிம்.
“எனது குழந்தையுடன் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்துக்கு வருவது இதுவே முதல்முறை. என் குடும்ப உறுப்பினர்களுடன் இங்கு வந்துள்ளேன். ஒருவருடன் ஒருவர் நேரம் செலவிட்டு மகிழ இது ஒரு சிறந்த இடம் என்று நினைக்கிறேன்,” என்றார் திருமதி ஜன்னா.
திட்டத்தின் அறிவிப்பு நிகழ்ச்சிக்கு வந்த குடும்பங்களில் அவரது குடும்பமும் ஒன்று. திருமதி மெலீன் சானும் அவரின் பிள்ளைகளுடன் அதில் கலந்துகொண்டார்.
“என் வேலையின் இயல்பு காரணமாகக் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது அரிது. விலங்கியல் தோட்ட நுழைவுச்சீட்டுகளுக்கான கட்டணம் அதிகம். இதுபோன்ற திட்டங்களால் கட்டணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் என் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட முடிகிறது,” என்றார் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான திருமதி சான், 41.
