தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறார்களை மகிழ்விக்க ‘ஒரு கதை சொல்லவா?’ நிகழ்ச்சி

2 mins read
909a0730-3e1e-4846-889e-3cb05227ad8e
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) ‘ஒரு கதை சொல்லவா?’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. - படம்: தத் த்வம் அசி இசைப்பள்ளி
multi-img1 of 2

கதைகளையும் இசையையும் ஒரே நேரத்தில் ஒரே மேடையில் ரசிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், இதோ உங்களுக்காக ஒரு சிறப்பு அனுபவம்!

தமிழ் இளையர் விழாவின் ஒரு பகுதியாக தத் த்வம் அசி இசைப்பள்ளி வழங்கும் ‘ஒரு கதை சொல்லவா?’ தமிழ்க் கதைசொல்லல் இசைநிகழ்ச்சியில் குழந்தைகளும் குடும்பங்களும் பங்கேற்று மகிழலாம்.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) ‘தி ஆர்ட்ஸ் ஹவுஸ்’ கட்டடத்தின் ‘ப்லேடென்’ அரங்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியை நீங்கள் பிற்பகல் 1.30 மணி அல்லது 3.30 மணிக்குக் காணலாம்.

இந்த நிகழ்ச்சியின் மையத்தில் உள்ளவர், கதைகளைக் கேட்க ஆர்வம் மிகுந்த ‘குட்டி’ கவிதா. இரவு நேரங்களில் தாத்தா சொன்ன கதைகளில் ஆழ்ந்திருந்த அவளின் கண்முன்னே, ஒருநாள் அந்தக் கதைகளின் பாத்திரங்கள் உயிரோட்டத்துடன் தோன்றுகின்றன.

பார்வையாளர்களும் ‘குட்டி’ கவிதாவுடன் இணைந்து, இந்த மந்திரக் கதை உலகிற்குள் பயணம் செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

“நம்மில் பெரும்பாலானோர் சிறுவயதில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா சொன்ன கதைகளோடு வளர்ந்தவர்கள். அந்த இனிய அனுபவத்தை இன்றைய தலைமுறைக்கும் இசை, நாடகத்தின் வழியாக மீண்டும் கொண்டு செல்லவே இந்த நிகழ்ச்சியை உருவாக்கினோம்,” என்று இந்த இசைப்பள்ளியின் இயக்குநரான லாவண்யா சம்பத் கூறினார்.

“குழந்தைகள் கதையைக் கேட்பதை தாண்டி, அதில் வரும் பாத்திரங்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

‘ஒரு கதை சொல்லவா?’ நிகழ்ச்சி இசைப்பள்ளியின் மூன்றாவது தமிழ் மேடை தயாரிப்பு. ஐந்து நடிகர்களைக் கொண்ட சிறிய குழுவுடனும் இந்நிகழ்ச்சிக்காகவே தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட இசையுடனும் குழந்தைகள் தமிழுடன் நெருக்கமாகவும் எளிதாகவும் இணையும் விதத்தில் இந்தத் தயாரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

5 முதல் 12 வயதுடைய சிறார்கள், பெற்றோர், தாத்தா-பாட்டி, சகோதரர்கள், நண்பர்கள் என அனைவரும் சேர்ந்து, இசை, நாடகம், கற்பனை ஆகியவை இணைந்த காலமற்ற கதைசொல்லல் உலகிற்குள் மூழ்குவதற்கான வாய்ப்பு இது.

குழந்தைகளும் பெரியவர்களும் ஒன்றாக ரசிக்கக்கூடிய வகையில், குடும்பங்களுக்குச் சிறப்பு நுழைவுச்சீட்டு சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உங்கள் நுழைவுச்சீட்டுகளை இப்போதே www.tinyurl.com/TamilStorytime2025 என்ற இணையத்தளத்தில் பெற்றுகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்