மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் இருக்கும் காய் காய் (Kai Kai), ஜியா ஜியா (Jia Jia) ஆகிய இரு பாண்டா கரடிகளும் தங்களின் பிறந்தநாளை இவ்வாண்டு உற்சாகமாகக் கொண்டாடின.
அவ்விரு பாண்டா கரடிகளும் சிங்கப்பூரில் இருக்கக்கூடிய காலம் விரைவில் முடிவடைகிறது.
‘ரிவர் வொண்டர்ஸ்’ பூங்காவில் செப்டம்பர் 14ஆம் தேதி வரை பாண்டா தொடர்பான பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் கண்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மண்டாய் வனவிலங்குக் குழுமம் தெரிவித்தது.
செப்டம்பர் 3ஆம் தேதி, பெண் பாண்டாவான ஜியா ஜியா தனது 18வது வயதை எட்டியது.
அதனைக் கொண்டாடும் வகையில் செப்டம்பர் 5ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு, குளிரூட்டப்பட்ட பாண்டா கரடிக் காப்பகத்தில் ஜியா ஜியா பனிக்கட்டி கேக்குகளைச் சுவைத்தது.
ஆண் பாண்டாவான காய் காய், செப்டம்பர் 14ஆம் தேதி தனது 19வது வயதை எட்டும். இதையொட்டி செப்டம்பர் 13ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு அதன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.
பாண்டா கரடிகளைப் பராமரிக்கும் குழுவினர் அவற்றிற்கான சிறப்புப் பிறந்தநாள் உணவுகளைத் தயாரித்தனர்.
பாண்டாக்கள் காடுகளில் உணவைத் தேடி உண்ணும் இயல்பான பழக்கத்தை ஊக்குவிக்கவும் அவற்றின் உடலையும் மனத்தையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக மண்டாய் வனவிலங்குக் குழுமம் கூறியது.
பாண்டா கரடிகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மூன்று சிறப்பு வட்டாரங்களைக் கொண்ட சிறப்புக் கண்காட்சியும் நடந்தது.

