தோ பாயோவில் எண் 9 லோரோங் 7ல் அமைந்துள்ள ‘நன்னீர் நண்டு’ (River crab) என்ற விளையாட்டுத் திடலில் சிறுவர்களுக்கான விளையாட்டு அம்சங்களை ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்கப்பள்ளி, பெய் சுன் பொதுப் பள்ளி மாணவர்கள், அந்த வட்டாரத்தில் இருக்கும் ‘பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ்’ பாலர் பள்ளியைச் சேர்ந்த 120 மாணவர்களுடன் இணைந்து குடியிருப்பாளர்கள் வடிவமைத்து உருவாக்கினர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ‘நமது குடியிருப்புப் பேட்டைகளை உருமாற்றுவோம்’ எனும் வீவக நகர்ப்புறங்களையும் குடியிருப்புகளையும் புதுப்பிக்கும் திட்டத்தின்கீழ் அந்தப் பூங்கா உருமாற்றம் கண்டுள்ளது. அதன் நடுநாயகமாக விளங்குகிறது புதிய விளையாட்டுத் திடல்.
ஏப்ரல் 6 ஞாயிற்றுக்கிழமையன்று அந்தத் திடல் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்ட நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், விளையாட்டுத் திடலின் நிறைவுப் பணிகளில் ஈடுபட்ட குடியிருப்பாளர்கள், மாணவர்கள் என ஏறக்குறைய 100 பேருடன் அமைச்சரும் பங்குகொண்டார்.
“தனித்துவமான ‘நன்னீர் நண்டு’ விளையாட்டுத் திடல் உட்பட பூங்காவின் மேம்பாடு, சமூகத்தினர் இணைந்து அவர்களின் அக்கம்பக்கத்தை எவ்வாறு வடிவமைக்கலாம் என்பதற்கான சான்று. இத்தகைய திட்டங்கள் சமூக உறவுகளையும் குடியிருப்பாளர்களிடையிலான தொடர்புகளையும் வலுப்படுத்துகின்றன,” என்றார் அமைச்சர் லீ.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 2021ஆம் ஆண்டிலிருந்து இந்த விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பூங்காவை வடிவமைக்கும் பணியில் குடியிருப்பாளர்களை ஈடுபடுத்தியது.
விளையாட்டுத் திடலின் ரப்பர் தரைத்தளத்தை வடிவமைப்பது தொடர்பில் 2024ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் குடியிருப்பாளர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் வெற்றிபெற்ற ஃபர்ஸ்ட் தோ பாயோ தொடக்கப் பள்ளி மாணவி டே ஜியா லெ வடிவமைத்த நீர்நாய் கருப்பொருளில் அமைந்த வடிவம் விளையாட்டுத் திடலின் தரைத்தளத்தை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது.
செல்லப்பிராணிகளுக்கான வசதிகள், சமூகத் தோட்டம், மேம்படுத்தப்பட்ட விளக்குகள், நடைபாதைகள் ஆகியவற்றுடன் பூங்கா புது மெருகு பெற்றுள்ளது.
வார இறுதி நாள்களில் வீட்டிலேயே இருந்துகொண்டு தொலைக்காட்சி பார்ப்பதைவிட இதுபோன்ற விளையாட்டுத் திடல்களுக்குச் சென்று விளையாடுவது மனத்திற்கு உற்சாகத்தையும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள் சிறுவர்களே!