சிங்கப்பூரில் பத்தாவது முறையாக இடம்பெற்ற ‘பூங்கா விழா’ வண்ண மலர்கள், கண்ணைக் கவரும் தாவரங்களுடன் பிரம்மாண்டமாக நடந்தேறியது.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விழா, இவ்வாண்டு ஜூலை 4ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடைபெற்றது. மலர்களின் விழா எனும் கருப்பொருளில், திருவிழா போலக் காட்சியளித்தது.
விழாவில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள்
வெப்பமண்டலப் பகுதிகளின் தாவரங்கள், மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ரோலர் கோஸ்டர்’ சாகச வண்டி பிள்ளைகளின் கவனத்தை ஈர்த்தது.
வண்ண மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மலர்ச்சுழல் இதில் இடம்பெற்றது. ஆர்க்கிட் மலர்களைக் கொண்ட வளைவுப் பாதைகளும் இருந்தன.
இருபுறமும் சிவப்பு, ஊதா, மஞ்சள், எலுமிச்சை, பச்சை, அடர் பச்சை வண்ணத் தாவரங்களைக் கொண்ட பாதை உருவாக்கப்பட்டிருந்தது. அதன் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிகள், வண்ணக் கோலத்தை உருவாக்கும் உணர்வை அளித்தன.
எண்ணற்ற மலர்கள் நிறைந்த உலகிற்குள் பயணம் செய்யும் உணர்வை அது வழங்கியது.
அத்துடன், பிள்ளைகள் விளையாடி மகிழும் வண்ண விளையாட்டுப் பூங்காக்களும் அங்கு இருந்தன.
தோட்டக்கலைப் போட்டிகள்
மிக நீளமான வாழைத் தார், கண்ணீர்த் துளிகளைப் போன்ற தோற்றம் கொண்ட மிளகாய் (Biquinho pepper), ‘தங்கக் கொக்கிப்’ பூசணிக்காய் என வெவ்வேறு விதமான காய்களும் பழங்களும் பரிசுக்காகப் போட்டியிட்டன.
பத்து வகையான விளைச்சல்கள் பிரிவிலும், பொதுப் பிரிவிலும் போட்டியிட்ட தாவர, காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மனிதர்களால் கைவிடப்பட்டு எறும்புகளால் கைப்பற்றப்பட்ட தோட்டம் எனும் கருப்பொருளில் வடிவமைப்பு இடம்பெற்றிருந்தது.
காப்பிக் கோப்பைகள், மாணவர்களின் உதவியுடன் களிமண்ணால் செய்யப்பட்ட எறும்புகள் எனப் பார்வையாளர்களின் கவனத்தை அது ஈர்த்தது.
மேலும், உள்ளூர், வெளிநாட்டுத் தோட்டக் கலைஞர்கள் பலரின் வடிவமைப்புகளும் இடம்பெற்றன.

