தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காட்டிற்குள் அம்மாவின் குரல்

3 mins read
b73fd325-4b55-40d9-aeb3-ce40904c04c9
காட்டிற்குள் மாட்டிக்கொண்ட சிறுமி. - படம்: ஊடகம்

இந்தக் குரலை எங்கேயோ கேட்டிருக்கிறேனே என்ற சிந்தனை என்னைக் குடைந்தது. மீண்டும் அந்தக் குரல் கேட்காதா என்ற ஆர்வம் என்னை அடர்ந்த காட்டிற்குள் அழைத்துச் சென்றது.

என் கண்கள் அந்தக் குரல் யாருடையது என்று அங்கும் இங்கும் தேடியது. ஆனால், என் கண்களில் யாரும் தென்படவில்லை.

அது ஒருவேளை என் கற்பனையாக இருக்குமோ என்று நினைத்து வீடு திரும்ப முடிவெடுத்தேன். ஆனால், திரும்பியவுடன் அந்தக் குரல் மீண்டும் கேட்டது, இந்த முறை பாடலாக ‘வா, வா’ என்று அந்தக் குரல் சொல்வதுபோல் தெரிந்தது.

பாடலின் சத்தம் வரும் திசையை நோக்கி, மின்னல் வேகத்தில் ஓடினேன்.

அந்த இடத்தை அடைந்தேன். திடீரென்று அமைதி நிலவியது. பூச்சிகளின் சத்தம் மட்டுமே கேட்டது.

“யார் நீ? உன் குரலை நான் முன்பு கேட்டிருக்கிறேன். ஆனால், நினைவுக்கு வரவில்லை. யார் நீ?” என்று கத்தினேன். ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. பயத்தில் கண்ணீர் ஆறாக என் கண்களில் இருந்து ஓடியது.

திடீரென்று, அந்தக் குரல் பேசியது. “நான்தான் உன் அம்மா, நீ சிறுவனாக இருந்தபோது நான் இறந்துவிட்டேன்,” என்றது.

அதைக் கேட்டதும் என் சிறு வயது ஞாபகங்கள் எனக்கு வந்தன. என் அம்மா நான் போகும் இடம் எல்லாம் எப்பொழுதும் என்னுடனேயே இருப்பார். நான் சாப்பாடு வேண்டாம் என்றாலும் என்னிடம் ஏதாவது கூறி சாப்பிட வைத்து விடுவார். என்னால் அவரை மறக்கவே முடியாது. அவர் இல்லாததை எண்ணி ஒவ்வொரு நாளும் அழுதிருக்கிறேன்.

அந்தக் குரலும் நானும் பலவற்றைப் பேசி சிரித்தோம். எங்கள் சிரிப்புச் சத்தம் காடு முழுவதும் பரவியது.

நான் அந்தக் குரலை எப்போதும் என்னுடனேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால், அந்தக் குரல் அதை மறுத்தது. என் அம்மாவை விட்டுச் செல்ல மறுத்தேன்.

அந்த நேரத்தில், அந்தக் குரல் திடீரென “என்னைக் காப்பாற்று, காப்பாற்று,” என்று பயத்துடன் கத்தியது.

அந்தக் குரல் கேட்கும் திசையிலேயே சென்றேன். அடர்ந்த காட்டிற்குள் சென்ற பின் அந்தக் குரல் நின்றது. நான் “என்ன ஆனது அம்மா?” என்று பதைபதைப்புடன் கேட்டேன்.

அந்தக் குரல் கிண்டலும் கேலியுமாய்ச் சிரித்தது. நான் வீசிய வலையில் சிக்கிக் கொண்டாய், முட்டாளே!” என்றது.

அப்போதுதான் அது என் அம்மா இல்லை என்று புரிந்து கொண்டு, தப்பி ஓட முயன்றேன். ஆனால், என்னால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.

அந்தக் குரல் ஒரு மந்திரவாதியின் உருவத்திற்கு மாறியது. அந்த மந்திரவாதி ஒரு கூர்மையான, பெரிய கத்தியை என் மேல் வீசினார்.

அம்மா என்று கத்திக்கொண்டே கீழே விழுந்தேன். என் குரல் கேட்டு சமையல் அறையில் வேலையாக இருந்த என் அம்மா ஓடி வந்தார்.

என் அம்மாவை நேரில் பார்த்ததும் கண்களில் கண்ணீர் மல்க எழுந்து அம்மாவை இறுக அணைத்துக்கொண்டேன்.

அம்மா “கனவு கண்டாயா? சரி எழுந்து வேலையைப் பார்,” என்று சிரித்துக்கொண்டே சென்றார்.

அப்போதுதான் நான் கண்டது கனவு என்று எனக்குப் புரிந்தது. ‘காட்டிற்குள் எப்படியெல்லாம் தவித்தோம். நல்லவேளையாக கனவுதான்’ என்று நினைத்தபடி நிம்மதி பெருமூச்சு விட்டபடி காலைக்கடன்களை முடிக்கச் சென்றேன்.

மீனா ரத்னகுமார், உயர்நிலை இரண்டு, பார்ட்லி உயர்நிலைப் பள்ளி

குறிப்புச் சொற்கள்