பாலர் பள்ளிப் பிஞ்சுகளின் பெரனக்கான் விருந்து

பாலர் பள்ளிப் பிஞ்சுகளின் பெரனக்கான் விருந்து

2 mins read
50547159-a20a-4bfd-8558-869437f6c16d
மகள் யானாவுடன் பெற்றோர் நடாலியா ஸ்வென்சனும் சமித் சௌத்ரியும்.   - படம்: அனுஷா செல்வமணி

திருவாட்டி நடாலியா ஸ்வென்சனுக்கு இவ்வாண்டு அன்னையர் தினம் சற்று மாறுபட்டதாக அமைந்தது.

லிட்டில் பாடிங்டன் பாலர் பள்ளி சிறார் வழிநடத்திய தனித்துவமான உணவக அனுபவத்தின்மூலம் அன்னையர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடினார் அவர்.

40 வயது திருவாட்டி நடாலியாவின் மூன்று வயது மகள் யானா சௌத்ரி லிட்டில் பாடிங்டன் பாலர் பள்ளியில் பயில்கிறார்.

யானாவைப் போல இரண்டிலிருந்து ஆறு வயதுக்கு உட்பட்ட கிட்டத்தட்ட 180 சிறுவர் சிறுமியர், வயலட் ஊன் உணவகத்தைத் தங்கள் வசமாக்கினர்.

அவர்கள் விருந்தினர்களை வரவேற்று, மேசையருகே உணவுகளைப் பரிமாறியதுடன் கலைநிகழ்ச்சிகளையும் வழங்கினர்.

வழக்கமான பாலர் பள்ளி நிகழ்ச்சிகளுக்குப் பதிலாகச் சிறார் உண்மையான உணவகச் சூழலில் களமிறங்கினர்.

பெரியவர்களுடன் நேரடியாக உரையாடி அவர்களின் தன்னம்பிக்கை, பொதுவெளியில் பேசும் திறன், சமூகத் தொடர்புத் திறன் ஆகியவற்றை அதன்மூலம் வளர்த்துக்கொண்டனர்.

அந்த நிகழ்வானது உணவு குறித்த தேடல், கதை சொல்லுதல், இசை, நடனம், கலாசாரப் புரிதல், தகவல் தொடர்புத் திறனை வளர்க்கும் செயல்பாடுகளை உள்ளடக்கியது. ஒரு மாத காலம் நீடித்த முழுமையான பெரனக்கான் கலாசாரம் பற்றிய கற்றல் பயணத்தின் முத்தாய்ப்பாகவும் அது அமைந்தது.

தொடர்புடைய செய்திகள்

பிள்ளைகள் பெற்றோரை வரவேற்பது, வழிநடத்துவது, பெரனக்கான் உணவுகளை அறிமுகப்படுத்துவது, வகுப்பின்போது கைப்படச் செய்த படைப்புகளைக் காட்சிப்படுத்துவது என அந்த அனுபவம் அனைவரையும் ஈடுபடுத்தக்கூடிய வகையில் அமைந்தது.

உணவருந்தும் அனுபவத்தில் வயலட் ஊன் உணவகத்தின் கூட்டு முயற்சியுடன் பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரனக்கான் உணவுப் பட்டியலும் இடம்பெற்றது.

அதில் குய் பை டீ, கோ ஹியாங், விங்டு பீன் சாலட், சிக்கன் சாத்தே, டிரை லக்சா, கோகனட் டிலைட் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

குழந்தைகள், பெற்றோருடன் அமர்ந்து உணவருந்தியதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு உணவையும் மேசையருகே வந்து அவர்களே நேரடியாக அறிமுகப்படுத்தினர்.

“பாலர் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து யானாவின் மொழித்திறனும் ஆர்வமும் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ச்சியடைந்துள்ளன. அவள் இப்போது புதிய வார்த்தைகள், பாடல்கள், பலதரப்பட்ட கேள்விகளுடன் வீட்டுக்கு வருகிறாள். இந்த அனுபவம் அவள் மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் விதம், நட்பை உருவாக்கும் முறை, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் விதம் ஆகியவற்றைச் செம்மைப்படுத்துகிறது,” என்றார் யானாவின் தந்தையார் சமித் சௌத்ரி, 46.

குறிப்புச் சொற்கள்