குறும்புத்தனத்தால் ஏற்பட்ட சிக்கல்

குறும்புத்தனத்தால் ஏற்பட்ட சிக்கல்

படம்: செயற்கை நுண்ணறிவு

28 Sep 2026 - 5:25 am

2 mins read

மாலைப் பொழுது இனிமையாக மலர்ந்தது. வண்டுகளும் தேனீக்களும் சங்கீதம் பாடிக்கொண்டிருந்தன.

தமிழ்மொழி விழாவை முன்னிட்டுச் சோழர்களின் வரலாற்றைப் பற்றி ஒரு மேடை நாடகம் சமூக மன்றம் ஒன்றில் நடக்கவிருந்தது. அதில் கலந்துகொண்ட பாலாவும் மாறனும் முக ஒப்பனை செய்யத் தொடங்கினர்.

மாறன் ஒரு கிராமவாசியாக வேடமிட்டுக் கொண்டான். சோழ அரசனாக நடித்த பாலா, ஒரு கிரீடத்தையும் ஒட்டுத் தாடியையும் அணிந்து கொண்டான்.

அதைப் பார்த்த மாறன், “பாலா! உன்னைப் பார்க்க உண்மையிலேயே அரசன் போல் உள்ளது,” என்று கூறி பாலாவைப் பாராட்டினான்.

அதற்குப் பாலா, “அது இருக்கட்டும் மாறா! நான் உற்சாகமாகத் தான் இருக்கிறேன். ஆனால், அதே நேரத்தில் எனக்குப் பயமாக இருக்கிறது. என் வசனங்களை நான் மறந்துவிட்டால்?,” என்று பதற்றத்துடன் கேட்டான்.

மாறன் பாலாவைச் சமாதானப்படுத்த முயன்றான். அப்போது அவன், “சரி. நாம் கழிவறைக்குச் சென்று கொஞ்சம் அமைதியடைவோம்,” என்று யோசனை கூறினான்.

பாலாவும் அதற்குச் சம்மதித்தான். பாலா ஆசிரியரிடம் சென்று, “ஆசிரியர், நாங்கள் கழிவறைக்குச் செல்லலாமா?” என்று அனுமதி கேட்டான். அதற்குச் சம்மதித்த ஆசிரியர் சீக்கிரமாக வரவேண்டும் என்று கூறினார்.

அவர்கள் மின்னல் வேகத்தில் கழிவறைக்குள் நுழைந்தனர். கழிவறைக்குள் நுழைந்த பாலாவும் மாறனும் கை கழுவும் இடத்தில் இருந்த தண்ணீரை அள்ளித் தெளித்து குறும்புத்தனம் செய்தனர்.

முழுமையாக நனைந்ததால், அவர்களின் முக ஒப்பனை கலைந்தது. அதைக் கவனிக்காமல் இருவரும் விளையாடினர். அப்போது மாறன் விளையாட்டுத்தனமாகப் பாலாவைத் தள்ளினான். இதனால், பாலா கீழே விழுந்தான்.

அவனது கை எலும்பும் முறிந்துவிட்டது. வலியைப் பொறுக்க முடியாத பாலா அழத் தொடங்கினான். பதற்றமடைந்த மாறன் உடனே ஆசிரியரிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தான்.

பாலாவின் காயத்திற்கு முதலுதவி அளித்த ஆசிரியர், “இவன் இல்லாமல் நாடகம் நடக்காது,” என்று வருத்தத்துடன் கூறினார். அப்போது தங்களின் தவற்றை உணர்ந்த இருவரும் வருந்தினர். அவர்கள் ஆசிரியரிடம் மன்னிப்புக் கோரினர்.

இரு நண்பர்களும் ‘விளையாட்டு வினையாகும்’ என்பதற்கு ஏற்ப தேவையில்லாமல் விளையாடியதால் பெரிய சிக்கல் ஏற்பட்டது என்பதை உணர்ந்தனர். இனிமேல் அந்தத் தவற்றைச் செய்யக்கூடாது என்று முடிவு செய்தார்கள்.

அந்தச் சம்பவம் அவர்களின் மனத்தில் பசுமரத்தாணி போல பதிந்தது.

ஜெயபிரகாசம் ஜோஷித், தொடக்கநிலை 6.
ஜெயபிரகாசம் ஜோஷித், தொடக்கநிலை 6. - படம்: எவெர்கிரீன் தொடக்கப்பள்ளி
குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாயம்கழிவறை