இந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி எங்கள் பள்ளியில் சிறுவர்கள் தின விழாவை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடினோம். சிங்கப்பூரில் சிறுவர்கள் தினம் என்பது மிகவும் முக்கியமான நாள். சிறுவர்கள் தினம்
நாங்கள் அனைவரும் இந்தச் சமூகத்தின் முக்கியமானவர்கள் என்பதையும் எங்களின் ஆசைகள், உரிமைகள், எதிர்காலம் குறித்து அனைவருக்கும் நினைவூட்டுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.
சிறுவர்களே நாட்டின் எதிர்காலம் என்பதற்கு இணங்க எங்கள் பள்ளி ஆசிரியர்கள் எங்களுக்காக நிகழ்ச்சிகளைப் படைத்தனர். அது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது!
முதலில், ஓர் அருமையான பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. பொம்மைகள் பாடி, ஆடியதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டினோம். அதன் பிறகு, எங்கள் ஆசிரியர்கள் சிலர் அழகாக நடனம் ஆடினார்கள்! அவர்கள் நடனமாடியது மிகவும் அருமையாக இருந்தது.
ஊதா உலா: இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சிறுவர்கள் தினத்துடன், ‘ஊதா வண்ண உலா’ என்ற கொண்டாட்டத்தையும் சேர்த்து நடத்தினார்கள்.
அதனால் எங்கள் பள்ளி ஆசிரியர்களும் பார்க்க வந்த பெற்றோர்களும் ஊதா நிற ஆடைகளை அணிந்து வந்திருந்தார்கள்! எங்கு பார்த்தாலும் ஊதா வண்ணமாகவே இருந்தது!
பிறகு, எங்கள் வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள். ஒவ்வோர் ஆசிரியரிடமிருந்தும் பரிசுகளைப் பெற்றபோது எங்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை! இன்னும் சில ஆசிரியர்கள் எங்கள் பெயர் பொறிக்கப்பட்ட சிறப்புப் பரிசுகளையும் கொடுத்தார்கள்!
வித்தியாசமான விளையாட்டு: பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தபோது, ஒரு வித்தியாசமான விளையாட்டை விளையாடச் சொன்னார்கள். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ‘சிட்டிங் வாலிபால்’ விளையாடினோம்.
அது என்ன தெரியுமா? உடல்நலக் குறைபாடு கொண்டவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் விளையாடும் ஒலிம்பிக் விளையாட்டு அது. நாங்கள் தரையில் அமர்ந்தபடி வாலிபால் விளையாடினோம். மிகவும் கடினமாக இருந்தது.
அப்படி விளையாடும்போது மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் எப்படி இருக்கும் என்பதை அறிய உதவியது. அது ஓர் அருமையான அனுபவமாக இருந்தது!
சிறுவர்களே, உங்கள் பள்ளியில் சிறுவர்கள் தினக் கொண்டாட்டமும் இப்படிச் சிறப்பாக இருந்ததா?
மோகன கலையரசன் ரக்ஷணாஸ்ரீ
தொடக்கநிலை 5