சிங்கப்பூரின் 60வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், மண்டாய் வனவிலங்குக் காப்பகம் மே 27 அன்று, ‘Mandai is Wild about SG’ என்ற ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய அளவிலான கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. அவ்வகையில் சிறப்பு சலுகைகள், இது வரை பார்த்திராத புதுமையான வனவிலங்கியல் அனுபவங்கள், சமூக நடவடிக்கைகள் போன்றவற்றை உள்ளடக்கியது தான் இந்த ‘Mandai is Wild about SG’.
அனைவரும் மண்டாய் வனப்பகுதியில் இயற்கையுடன் ஒன்றி அர்த்தமுள்ள அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே இம்முயற்சியின் நோக்கமாகும்.
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி, திருவாட்டி பெலினா லீ “ ‘Mandai is Wild about SG’ என்ற முயற்சியின் மூலம் உள்ளூர் வட்டாரவாசிகள் இப்பயணத்தில் மீண்டும் மண்டாய் வனப்பகுதியுடன் இணைந்திருப்பர் என்று நான் நம்புகிறேன்.” என்று சொன்னார்.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் ‘SG60 WildPass Specials’ எனப்படுகிற சிறப்பு நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இச்சலுகையின் கீழ் சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திற்கும் ரிவர் வொண்டர்ஸ்கான இரண்டு நுழைவுச்சீட்டுகளை 60 வெள்ளி கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சிறப்பு சலுகை மே 27 முதல் ஜூன் 30 வரை நடப்பில் இருக்கும்.
மூத்த குடியிருப்பாளர்களுக்காக ஒரு சிறப்பு வருடாந்திர ‘Friends of மண்டாய்’ உறுப்பினர் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. வழக்கமான கட்டணம் 235 வெள்ளி. இந்தச் சலுகையினால் மூத்த குடியிருப்பாளர்கள் 60 வெள்ளியை மட்டுமே கட்டணமாக செலுத்தி அந்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
இச்சலுகை ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும்.தேசத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்கு நன்றி கூறும் வகையில் மூத்த குடியிருப்பாளர்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
இதுபோன்ற பல சிறப்பு அம்சங்களையும் ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது இந்த ‘Mandai is Wild about SG’ . இதைப் பற்றிய கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள நீங்கள் www.mandai.com என்ற இணையத்தளத்தை நாடலாம்.

