படிக்க, சிறக்க: ஒற்றுமையே உயர்வு தரும்

படிக்க, சிறக்க: ஒற்றுமையே உயர்வு தரும்

2 mins read
3490efee-0c13-4abb-85e8-a574a69992a1
மாணவர்களுக்கான வாழ்வியல், மனநலம், மேம்பாடு சார்ந்த தொடர். - படம்: செயற்கை நுண்ணறிவு

தொடக்கநிலை ஐந்தில் பயிலும் அகிலன், காற்பந்து விளையாட்டைத் தன் இணைப்பாடமாக எடுத்தார். பள்ளிக் குழுவுக்காக விளையாடும் அகிலன், அதில் தாக்குதல் ஆட்டக்காரராகச் (striker) செயல்படுகிறார்.

அகிலன், எதிலும் நன்கு கவனம் செலுத்தக்கூடியவர். பேச்சில் தெளிவு, உள்ளத்தில் நிதானம், நடையில் மிடுக்கு ஆகிய குணங்களைக் கொண்ட அகிலனை மற்ற மாணவர்கள் மதிக்கின்றனர்.

வீட்டுப்பாடங்களைச் சரிவரச் செய்யும் அகிலனைப் பெற்றோர் அதிகம் கட்டுப்படுத்துவதில்லை.

ஆனால், அகிலனுக்குச் சிறிய மனக்குறை ஒன்று உள்ளது. கோல் அடிப்பதில் சிறந்தவனான அகிலன், சக குழுவினரைப் பந்தடிக்க விடுவதில்லை.

“என்னிடம் பந்தைக் கொடு,” என சக வீரர்கள் கூக்குரலிட்டும் அவர்களிடம் அகிலன் பந்தை அனுப்புவதில்லை.

ஒரு நாள், மற்றொரு பள்ளியைச் சேர்ந்த காற்பந்துக் குழுவுடன் அகிலனின் குழு மோதியது.

அகிலன் பந்துடன் ஓடும்போது எதிரே விளையாடிய தற்காப்பு ஆட்டக்காரர்கள் (defenders) குறுக்கிட்டு மடக்கிவிட்டனர். 

ஒத்துழைப்பின் மேன்மையை விளையாட்டுவழி புரிந்துகொண்ட அகிலன்.
ஒத்துழைப்பின் மேன்மையை விளையாட்டுவழி புரிந்துகொண்ட அகிலன். - படம்: செயற்கை நுண்ணறிவு

ஆட்டத்தின் முதற்பாதி முடிந்த நேரத்தில் அகிலனின் குழு எந்தக் கோலையும் வெற்றிகரமாக அடிக்கவில்லை. எதிரே விளையாடிய குழுவுக்கு ஒரு கோல் கிடைத்தது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“அவர்கள் என்னை மட்டுமே குறிவைக்கிறார்களே!” என அகிலன், ஆட்ட இடைவெளியின்போது காற்பந்துக் குழுவை வழிநடத்தும் ஆசிரியரிடம் கூறினார். 

“அகிலன், நீ சற்று யோசிக்க வேண்டும். மூன்று பேர் உன்னைக் குறிவைக்கிறார்கள். அப்படியென்றால், நம் குழுவிலுள்ள மற்ற ஆட்டக்காரர்களின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை. நீ கோல் அடிப்பது முக்கியமா? அல்லது உன் குழு வெற்றி பெறுவது முக்கியமா?” என்று அந்த ஆசிரியர் கேட்டார்.

ஆசிரியர் சொன்னதை அகிலன் புரிந்துகொண்டார்.

இரண்டாவது பாதியில் அகிலன் தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டான். சக விளையாட்டாளர்களிடம் பந்தை அனுப்பி அவர்களுக்கும் கோல் அடிக்க வாய்ப்புத் தந்தார்.

இறுதியில் அகிலனின் குழு வெற்றி பெற்றது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பெரும் உண்மையைக் காற்பந்து வழி அகிலன் கற்றார்.

குறிப்புச் சொற்கள்
காற்பந்துஒற்றுமைஉயர்வுஒத்துழைப்பு