படிக்க சிறக்க: மக்களின் மரியாதைக்குரிய தேசியக் கொடி

படிக்க சிறக்க: மக்களின் மரியாதைக்குரிய தேசியக் கொடி

2 mins read
017c1f02-2d5c-4ab5-99d9-117d4ac9f2db
தேசியக் கொடியின் சிறப்பை விவரிக்கும் கதை. - படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட்  மாதத்தின் தொடக்கத்தில் காமினியின் பாட்டி, வீட்டின் சன்னலுக்குக் கீழ் தேசியக் கொடியைத் தொங்க விடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பார்.

அந்த வழக்கத்தைச் சிலர் மட்டும் பின்பற்றுவதைக் கவனித்த 12 வயது காமினி, “எங்கள் வீட்டில் தேசியக் கொடி தொங்க விடப்படும் வழக்கம் இல்லை. பாட்டி தம் வீட்டில் இதனை ஏன் செய்கிறார்?,” என நினைத்து வியந்தாள்.

தேசிய தினத்திற்குப் பிறகு இரு நாள்கள் கழித்து காமினி பள்ளி முடிந்து பாட்டியைக் காணச் சென்றாள்.

“வாம்மா…எப்படி இருக்கிறாய்? தேசிய தின அணிவகுப்பைப் பார்த்தாயா? ” எனப் பாட்டி கேட்டார்.

முழுமையாகப் பார்க்கவில்லை எனத் தெரிவித்த காமினி, வாண வேடிக்கை இடம்பெற்ற கடைசி அங்கத்தை மட்டும் பார்த்தேன் என்றாள். 

பாட்டி சற்று நேரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தார். பின்னர், காமினி மீண்டும் பேச்சைத் தொடங்கினாள்.  

“பாட்டி, வீட்டுச் சன்னலுக்குக் கீழ் அல்லது வீட்டு வாசலுக்கு முன்னிருக்கும் மதிலில் உங்களைப் போல சிலர் தேசியக் கொடியைத் தொங்கவிட்டுள்ளனர். உங்களுக்கு நாட்டுப்பற்று அதிகமா?,”  எனக் கேட்டாள் காமினி. 

அமைதியைக் கலைத்துப் பாட்டி மீண்டும் பேசத் தொடங்கினார்.

“நான் 1950ல் பிறந்தேன். எனக்கு இப்போது 76 வயது. சிங்கப்பூரிலேயே நான் வளர்ந்தேன்,” எனத் தமது அனுபவத்தைப் பகிர ஆரம்பித்தார்.

நீங்கள் வளர்ந்தபோது இப்படித்தான் தேசிய தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தீர்களா? என்றார் காமினி.

பாட்டி சிரித்தவாறே, “நம் நாட்டுக்கு 61 வயது.  என் பள்ளிப்பருவத்தில் சிங்கப்பூர் ஆங்கிலேய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ‌

“அப்போது நம் நாட்டிற்குச் சொந்தக் கொடி என ஒன்றும் இல்லை. ஆங்கிலேயக் கொடியைப் பயன்படுத்தி காலஞ்சென்ற எலிசபெத் அரசியாருக்கான பாடலைப் பாடிக்கொண்டிருந்தோம்.

“அதன் பின்னர் மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்திருந்த காலகட்டத்தில் நான் படித்திருந்த பள்ளிகளில் மலேசிய மாமன்னரைப் போற்றும் ‘நெகராக்கூ’ கீதத்தைப் பாடினோம்,”  என்றார்.

பிற நாடுகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் சொந்தக் காலில் நிற்கும் சிங்கப்பூர் தனக்கென்ற கொடியையும் தேசிய கீதத்தையும் கொண்டிருப்பதில் பெருமை அடைவதாக அவர் கூறினார். 

நாம் சுதந்திரம் அடைந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதற்கான சின்னமாக நம் தேசியக் கொடி திகழ்வதாகப் பாட்டி காமினியிடம் தெரிவித்தார்.

நான் இந்த அளவிற்குச் சிந்திக்கவில்லையே பாட்டி என்று காமினி கூறினாள்.

“சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான் கொடி தொங்கவிடுவது, தேசிய தின அணிவகுப்பை முழுமையாகக் காண்பது, தேசிய தினத்தை ஒட்டி நடைபெறும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுகிறோம் ,” எனப் பாட்டி புன்சிரிப்புடன் கூறினார்.

தொடக்கத்தில் எளிய நாடாக இருந்த சிங்கப்பூர், மக்களின் உழைப்பாலும் தலைவர்களின் மதிநுட்பத்தாலும் உலக அளவில் கோலோச்சி நிற்பதை நினைத்துச் சிங்கப்பூரர்கள் பெருமை அடையவேண்டும். 

உழைத்து உயர நினைப்பவர்களும் பரிவுடன் பிறருக்கு உதவிக்கரம் நீட்டுபவர்களும் இங்கு பிறந்தாலும் எங்கு பிறந்தாலும் சிங்கப்பூர் அவர்களைச் சிறப்பிக்கும் என நம்புவோம்!

குறிப்புச் சொற்கள்