குட்டி மான் ‘சாங் கான்சில்’, தற்போது ஒரு புதிய மின்னிலக்க மாய உலகத்திற்குள் குதித்திருக்கிறது.
‘சாங் கான்சில் அண்ட் தி என்சான்டெட் ஃபாரஸ்ட்’ (Sang Kancil and the Enchanted Forest) என்ற புதிய மெய்நிகர் தொழில்நுட்ப சாகசம் சிங்கப்பூரில் தொடங்கியுள்ளது.
அவ்வெஞ்சுரா (Avventura) மீடியா கலையகமும் மாயா நடன அரங்கும் இணைந்து இந்த மெய்நிகர் உலகத்தை உருவாக்கியுள்ளன.
இது நடனமும் கதையும் கலந்த புதிய மெய்நிகர் தொழில்நுட்ப அனுபவத்தைத் தரும்.
இந்த விளையாட்டில் கலந்துகொள்வோர் மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ‘புளூடூத்’ தலையணி ஒலிவாங்கிகளை (headset) அணிந்துகொண்டு, ஓர் அறையில் நடமாடலாம்.
நண்பர்களும் குடும்பத்தினரும் ஒரு குழுவாக இணைந்து இதை விளையாடலாம்.
காட்டில் சாங் கான்சில் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க அனைவரும் சேர்ந்து உதவி செய்வதே இந்த விளையாட்டின் மையப்பொருள் ஆகும்.
இந்த வண்ணமயமான சாகசப் பயணம் குழந்தைகளுக்கு விடாமுயற்சி, நட்பு, சவால்களை எதிர்கொள்ளத் தேவையான தைரியம் போன்ற புதிய பண்புகளைக் கற்றுக்கொடுக்கிறது.
இத்திட்டத்தில் ‘டிஎடிசி’ எனப்படும் பன்முக ஆற்றல்களுக்கான நடனக் குழுவைச் (Diverse Abilities Dance Collective) சேர்ந்த உடற்குறையுள்ள நடனக் கலைஞர்களும் இணைந்து நடித்துள்ளனர்.
ஜூன் 6 முதல் ஆகஸ்ட் 2 வரை ஏழு தேசிய நூலகங்கள், எனேப்ளிங் வில்லேஜ் ஆகிய இடங்களில் இந்த நடனப் பயணம் வலம் வருகிறது.
இந்த மெய்நிகர் தொழில்நுட்ப சாகச அனுபவம் முற்றிலும் இலவசம் ஆகும்.
இவ்வாய்ப்பை அனுபவிக்க விரும்புவோர் முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்தை, தகுந்த இணையத்தளங்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

