சிங்கப்பூர் கலப்புத் தற்காப்புக் கலை (Mixed Martial Arts) வீராங்கனையான டிஃபனி டியோ, 36, ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்துள்ளார்.
மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை கிலோலா சோபிரோவாவை வீழ்த்தினார். கடந்த மே மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இதே வீராங்கனையிடம் டிஃபனி தோல்வியடைந்தார்.
ஜப்பானின் நகோயா நகரில் நடைபெற்ற அப்போட்டிகள் டிஃபனியின் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். அரையிறுதியில் இந்தியாவின் சுசிகா தரியலுடன் நடந்த போட்டி சமனில் முடிந்தது. எனினும், இருவரின் எடையை ஒப்பிட்டுப் பார்த்ததில், எடை குறைவாக இருந்ததால் டிஃபனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டிஃபனி ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது கடின உழைப்பால் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்புத் தற்காப்புக் கலை அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே சிங்கப்பூர் தங்கம் வென்றுள்ளது.
விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதிலும் வெற்றியடையலாம் என்பதற்கு டிஃபனியின் வெற்றி ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
