1. இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre) லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்றால், கண்ணாடியால் மின்னும் ஒரு அழகான கட்டடத்தைப் பார்க்கலாம். அதுதான் இந்திய மரபுடைமை நிலையம்!
இங்கே நம் முன்னோர்கள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்பதைப் பல பழைய பொருட்கள், படங்கள் வழியாக நாம் தெரிந்துகொள்ளலாம். பெரியவர்கள் பயன்படுத்திய உடைகள், நகைகள் மற்றும் அழகான கலைப் பொருட்களைப் பார்க்கும்போது நமக்கு மிகவும் பெருமையாக இருக்கும்.
இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து இங்கு வந்து அரசாங்க பணியையோ, தொழிலையோ செய்தவர்களின் வாழ்க்கையை இந்நிலையம் ஒரு கதையாய் கூறுகிறது.
இங்கு வாழும் நமக்கு இவ்வரலாறு மிக முக்கியமானது. நம் முன்னோர்களின் கதையும் நம் கதைதான்.
2. மலாய் மரபுடைமை நிலையம் (Malay Heritage Centre)
அடுத்து நாம் பார்க்கப் போவது கம்போங் கிளாம் (Kampong Glam) பகுதியில் இருக்கும் மலாய் மரபுடைமை நிலையம். இது ஒரு காலத்தில் மலாய் அரசர்கள் வாழ்ந்த பெரிய அரண்மனை (Istana Kampong Gelam) ஆகும்!
இந்த அழகான மஞ்சள் நிறக் கட்டடத்தைச் சுற்றிப் பெரிய தோட்டம் இருக்கிறது. உள்ளே சென்றால் நம் மலாய் நண்பர்களின் பாரம்பரிய உடைகள், இசைக்கருவிகள், விளையாட்டு, பாடல், முக்கியமானவர்களின் வரலாறு போன்றவற்றைக் கண்டு மகிழலாம். மலாய் கலாசாரத்தைப் புரிந்துகொள்ள இது ஒரு அருமையான இடம்.
மாணவர்களுக்கென பல நடவடிக்கைகள் அங்கு உள்ளன. வாயாங் கூலிட் (Wayang Kulit), அதாவது, மலாய்க்காரர்களின் தோல்பாவை கூத்தை ஓர் அறையில் நாம் காணலாம். மேலும், காணொளிகளின் வழி, இங்கே வாழ்ந்த மன்னர்களின் வாழ்க்கைச் சரிதத்தையும் நாம் அறிந்து கொள்ளலாம்.
3. சிங்கப்பூர் சீன கலாசார மையம் (Singapore Chinese Cultural Centre)
இறுதியாக நாம் பார்க்கப் போவது நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் சிங்கப்பூர் சீன கலாசார மையம். இது பார்க்க மிகவும் நவீனமான, பெரிய கட்டடமாக இருக்கும்.
இங்கு சீனர்களின் பாரம்பரிய பண்டிகைகள், உணவுகள் மற்றும் கலைகள் பற்றிப் பல சுவாரசியமான விளையாட்டுகள் மூலம் நாம் கற்றுக்கொள்ளலாம். பெரிய கணினித் திரைகளில் தொட்டு விளையாடி மகிழ்வதற்குக் குழந்தைகள் உங்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும்!
இந்த நிலையத்தில் பல பாரம்பரிய நடனக் குழுக்களும் இடம் பெற்றிருகின்றன. அவர்களும் தங்கள் கலையை இங்கே வருபவர்களுக்கு மேடையேற்றும் வசதிகளும் இங்குள்ளன.
மரபுடைமை நிலையங்களின் முக்கியத்துவம்
இந்த மூன்று இடங்களும் நமது சிங்கப்பூர் மக்களின் ஒற்றுமையையும் கலாசாரத்தையும் காட்டும் கண்ணாடிகள். இன சமய நல்லிணக்கம் சிங்கப்பூருக்கு இன்றியமையாதது. சிறிய நாட்டில் ஒருவருக்கொருவர் மிகவும் அருகில் வாழும் நாம், அனைவரின் உடை, உணவு, இசை, நடனம், இலக்கியம் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
உங்கள் பெற்றோருடன் இந்த இடங்களுக்குச் சென்று நேரில் பார்த்து மகிழுங்கள்!

