அடுத்த மாதம் முதல் சாகச நடவடிக்கைகளையும் வனவிலங்குகளையும் நேசிப்பவர்கள் புதிய அனுபவம் ஒன்றில் ஈடுபட்டு மகிழலாம்!
ஆசியாவின் முதல் சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்காவான ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ மார்ச் 12ஆம் தேதி சிங்கப்பூரில் திறக்கப்படவுள்ளது.
தெற்காசிய மழைக்காடுகளின் வெவ்வேறு சூழல்களைச் சித்திரிக்கும் எட்டு மண்டலங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப்பூ ங்காவில் அரியவகை விலங்குகளை மிக அருகில் இருந்து பார்க்கலாம்.
மலாயா புலிகள், செந்நாய், மலாயா டேப்பிர், தேள், சூரிய கரடி, உவர்நீர் முதலை உள்ளிட்ட மொத்தம் 36 வகை உயிரினங்கள் இந்தப் பூங்காவில் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.
அதுமட்டுமல்லாமல், அழியும் அபாயத்திலுள்ள இனங்களான பிரான்சுவா லங்குர் குரங்குகளையும் பிலிப்பீன்ஸ் புள்ளிமான்களையும் இங்கு நீங்கள் கண்டுகளிக்கலாம்.
பூங்காவில் 7,000 தென்கிழக்காசிய மரங்களும் புதர்களும் இருக்கின்றன.
உங்களில் இருக்கும் சாகச வீரர்களுக்கு இந்தப் பூங்காவில் பல விறுவிறுப்பான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. 13 அல்லது 20 மீட்டர் உயர்ந்த தளத்திலிருந்து குதிப்பது, மரங்களின் உச்சி வரை ஏறுவது, வழிகாட்டியுடன் மூன்று மணி நேர சாகச சுற்றுலாக்களில் பங்கேற்பது போன்றவை இந்தப் பூங்காவின் சிறப்பு அம்சங்களில் அடங்கும்.
உண்மையான தைரியசாலிகள், 60 மீட்டர் நீளமுள்ள மங்கிய குகைச் சுரங்கங்களை ஒளிரும் சிறிய விளக்கின் வெளிச்சத்துடன் பயணித்து பார்க்கலாம். உள்ளே ஏராளமான பழங்கால படிமங்களையும் அற்புதமான புற்றுப்பாறைகளையும் காண்பதோடு கண்ணாடி தரையின்வழி பயணித்து செல்லும்போது அதற்கு கீழே நூற்றுக்கணக்கான ஹிஸ்ஸிங் கரப்பான்பூச்சிகளை மிக அருகில் சென்று பார்வையிடலாம்.
தொடர்புடைய செய்திகள்
கூடுதல் கட்டணம் செலுத்தி மேல்குறிப்பிட்டசா கச நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டு நேரத்தை கழிக்கலாம்.
பூங்காவில் அமைந்துள்ள சிங்கப்பூரின் முதல் குகை போன்று வடிவமைக்கப்பட்ட உணவகத்தில் அமர்ந்து, சுவையான உணவை உண்டு ஓய்வெடுக்கலாம்.
விலங்குகளுடன் சுவாரசியமான முறையில் உங்கள் நேரத்தை செலவிட ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் ஏஷியா’ விலங்கியல் பூங்காவுக்கு உங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் சென்று பாருங்கள்!
நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கும் மேல் விவரங்களுக்கும் www.mandai.com என்ற இணையத்தளத்தை நாடுங்கள்.