இலங்கைச் சிறுத்தைக் குட்டிகளை இப்போது சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் காணலாம்.
ஒரே தாய்க்குப் பிறந்த அந்த மூன்று குட்டிகளுமே சிங்கப்பூரில் பிறந்தவை.
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் பிறந்த முதல் இலங்கைச் சிறுத்தைக் குட்டிகளாக இவை உள்ளன.
ஜனவரி 1ஆம் தேதி அக்குட்டிகள் பிறந்தன. அவை பிறந்து தற்போது மூன்று மாதங்கள் ஆகின்றன.
அம்மூன்று குட்டிகளில் இரண்டு ஆண் குட்டிகள்; ஒன்று பெண் குட்டி. அந்தக் குட்டிகளின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
தாயின் பெயர் யாலா. தந்தையின் பெயர் அசாங்கா.
பெருமளவில் வேட்டையாடப்பட்டும் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டும் உள்ள இலங்கைச் சிறுத்தைகள், அருகிவரும் விலங்கினங்களின் பட்டியலில் உள்ளன.
அருகிவரும் விலங்கினம் என்பது, முந்தைய காலத்தைக் காட்டிலும் தற்போது மிகக் குறைவான எண்ணிக்கையைக் கொண்டுள்ள விலங்கினத்தைக் குறிக்கும்.
காடுகளில் வாழும் இலங்கைச் சிறுத்தைகளின் எண்ணிக்கை 800ஐ காட்டிலும் குறைவு.
அந்தக் குட்டிகளை வளர்க்கும் முயற்சிக்காக வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த விலங்கியல் தோட்டங்கள் கைகோத்ததாக மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் விலங்குப் பராமரிப்பு அதிகாரி ஆனந்த் குமார் தெரிவித்தார்.
நல்ல உடல் நலத்துடன் இருக்கும் அந்தச் சிறுத்தைக் குட்டிகள் மூன்றும் நல்ல முறையில் வளர்வதைக் காணும்போது அனைவரும் மனநிறைவு அடைவதாக விலங்கியல் தோட்ட அதிகாரி ஆனந்த் குமார் தெரிவித்தார். அந்தச் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் அத்தகைய பிறப்புகளை அனைவரும் கொண்டாட வேண்டும் எனக் கூறினார்.
“அத்தகைய விலங்குகளை நேரில் காணும்போதுதான், அவற்றின் மீதான பாசமும் அக்கறையும் மக்களிடத்தே வளரும்,” எனத் திரு. ஆனந்த் குறிப்பிட்டார்.
அந்தப் புதுக் குட்டிகளுடன் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் தற்போது ஆறு இலங்கைச் சிறுத்தைகள் உள்ளன. இரவு நேரக் காப்பகத்திலும் (Night Safari) அந்த இனச் சிறுத்தை ஒன்று உள்ளது.
கட்டணம்: சிறார்களுக்கு $27.20, பெரியவர்களுக்கு $39.20

