சிங்கப்பூரின் பன்முகக் கலாசாரத்தையும் சமூக ஒற்றுமையையும் மாணவர்களிடையே ஆழமாகப் பதிய வைக்கும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 21ஆம் தேதி பள்ளிகளில் இன நல்லிணக்க நாள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டின் கொண்டாட்டம், ‘நமது மக்கள், நமது கைவண்ணம்’ (Our People, Our Tapestry) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டிருந்தது.
பல்வேறு சமூகங்களின் தனித்துவமான அடையாளங்கள், பாரம்பரியங்கள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சிங்கப்பூரின் சமூகத்தை எவ்வாறு வளப்படுத்துகின்றன என்பதை இக்கருப்பொருள் பிரதிபலிக்கிறது.
இதையொட்டி, செயிண்ட் ஆண்டனிஸ் கனோசியன் தொடக்கப்பள்ளியில் இன நல்லிணக்க நாள், பாரம்பரிய விளையாட்டுகள், கலாசார அனுபவங்கள், கண்காட்சிக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
பள்ளி வாய்ப்பாட்டுக் குழுவினர் ‘லிட்டில் ரெட் டாட்’ என்ற பாடலைப் பாடி அன்றைய நிகழ்ச்சிகளுக்குத் தொடக்கமளித்தனர்.
பள்ளி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மரபுடைமை மையத்தின் கண்காட்சிக் கூடங்களைப் பெற்றோர் ஆதரவுக் குழுவைச் சேர்ந்த தொண்டூழியர்கள் நிர்வகித்தனர். சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களின் பாரம்பரிய விளையாட்டுகள், உணவு வகைகள், இசைக் கருவிகள், கலாசாரப் பழக்கவழக்கங்கள், மரபுப் பொருள்கள் ஆகியவை அந்தக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
‘சாப்த்தே’, ‘கொங்காக்’, ஃபைவ் ஸ்டோன்ஸ், பம்பரம், பரமபதம், கயிறு தாண்டுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ஓவியம், கைவினை நடவடிக்கைகளிலும் அவர்கள் உற்சாகமாக ஈடுபட்டனர்.
இசை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, பாரம்பரிய மலாய் கைப்பறையான ‘கொம்பாங்கை’ (kompang) மாணவர்கள் இசைத்தனர். இந்தியப் பாரம்பரிய முரசு வாத்தியங்களின் சிறப்புகள் குறித்த செய்முறை விளக்கமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கலைப் பிரிவில், தொடக்கநிலை 1 மாணவர்கள் சிங்கப்பூரின் பாரம்பரியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கிய வண்ணமயமான ஓடுகளோடு கண்காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
சமூக ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தும் வாசகங்கள் இடம்பெற்ற காகிதச் சங்கிலிகளைப் பயன்படுத்தி, ‘நமது கைவண்ணம்’ (Weaving Our Tapestry) என்ற கூட்டுக் கலைப்படைப்பையும் மாணவர்கள் இணைந்து உருவாக்கினர்.

