வானம் எல்லை இல்லை

வானம் எல்லை இல்லை

2 mins read
66c104eb-d741-4594-a061-3bd80aa87fa4
தீபிகா, 10, மற்றும் லிகேஷ், 9, இதுவரையில் மொத்தம் 38 கல்வித் திட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.    - படம்: சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா)

பத்து வயது அக்கா தீபிகாவும் ஒன்பது வயது தம்பி லிகேஷும் ‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்ற பழமொழிக்கு ஏற்ப இளம் பருவத்திலேயே மொத்தம் 38 கல்வித் திட்டங்களில் பங்கேற்றுள்ளனர்

ரடின் மாஸ் தொடக்கப்பள்ளியில் பயிலும் இருவரும் வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களிலும் தங்கள் நேரத்தை விவேகமாக செலவழிக்கின்றனர்.

சிண்டா ஏற்பாடு செய்யும் காற்பந்து, ரோபோட்டிக்ஸ், ஓவியம், கல்வி முகாம்கள் போன்றவற்றில் ஆர்வத்துடன் தொடர்ந்து கலந்துகொள்கின்றனர். 

“எனக்கு ரோபோட்டிக்ஸ் மற்றும் காற்பந்து மிகவும் பிடிக்கும். நான் எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக ஆசைப்படுகிறேன்,” என்று முகமலர்ச்சியுடன் கூறினார் லிகேஷ்.

 தீபிகாவின் ஆர்வம் சற்று தனித்துவமானது என்றாலும் இருவரும் எல்லா நடவடிக்கைகளிலும் சேர்ந்து பங்குப்பெருவதுண்டு.

 “எனக்கு கலைகளில் அதிக நாட்டம் உள்ளது. ஓவியம் வரைவது, கைவினை பொருள்கள் உருவாக்குவது, நடனம் ஆடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்,” என்று புன்னகைத்தார் தீபிகா. அவர் எதிர்காலத்தில் ஒரு மருத்துவர் ஆக விரும்புகிறார்.

வயதில் சிறியவர்கள் ஆயினும் இதுவரையில் 38 கல்வித் திட்டங்களில் பங்கேற்றுள்ளனர் என்பது சாதனைக்குரிய ஒன்று.

வகுப்பறைகளைத் தாண்டி கல்வி ஆற்றலைப் பெற முடியும் என்பதை பிரதிநிதிக்கும் தீபிகாவும் லிகாஷும் தங்கள் பெற்றோரின் ஊக்கமும் ஆதரவும் பெரிதும் உதவின என்று கூறினர்.

“இதுபோன்ற நடவடிக்கைகளில் பங்கு பெறுவதால், பிள்ளைகளுக்கு எதிலும் சாதிக்கும் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் பிறக்கிறது.

“அதிக திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு அமைகிறது.

“கல்வி அறிவு நிறைந்து இருந்தால், அவர்களுக்கு வருங்காலத்தில் நிறைய வாய்ப்புகள் அமையும் ,” என்றார் தாயார் எல்லம்மாள்.

 இல்லத்தரசியான எல்லம்மாள் அதிகம் படிக்கவில்லை. அவரும் அவருடைய கணவரும் கல்வியின் முக்கியத்துவத்தை இரு பிள்ளைகளுக்கு தினசரி வலியுறுத்துகின்றன.

மேலும் இந்த கல்விப் பயணத்தில் பெற்றோர் இருவரும் ஓர் ஊன்றுகோலாக விளங்குகிறார்கள்.

“பெற்றோர் ஆகிய நாம், நம் பிள்ளைகளுக்குப் பல கனவுக் கோட்டைகளை அமைத்துக்கொள்வதுண்டு. ஆனால், அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்களின் கனவுகளுக்கும் நாம் ஆதரவாக இருக்க வேண்டும்.

“அவர்களிடம் ‘முடியாது’ என்று சொல்வதை தவிர்த்து ‘முயற்சி செய்’ என்று அவர்களுக்கு ஊக்கம் அளித்தால், அவர்களிடையே கனவுகளும் தன்னம்பிக்கையும் சிறகடித்துப் பறக்கும்,” என்றார்.

விடாமுயற்சியும் சரியான ஆதரவும் இருந்தால் கல்வியின் மேல் இருக்கும் நாட்டம் தொடர்ந்து வளரும் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறார்கள் தீபிகா மற்றும் லிகேஷ்.

கற்றலுக்கு வானம் கூட ஒரு எல்லை இல்லை என்பதை பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது அவசியமே!

குறிப்புச் சொற்கள்