தன்மீது நம்பிக்கை வைத்த காட்டு அரசன்

தன்மீது நம்பிக்கை வைத்த காட்டு அரசன்

3 mins read
எப்போது நம்முடைய தன்னம்பிக்கையை இழந்து போகிறோமோ அப்போதே நமது முயற்சிகளும் நம்மைவிட்டு போய் விடும். தன்னம்பிக்கை என்பது என்னால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று நம் மீது நம்பிக்கை வைப்பது. 
3bc85cc4-b0a8-4032-87de-206e01780d04
சிங்கம் - படம்: ஊடகம்

காட்டில் சிங்கம் ஒன்று கம்பீரமாக சுற்றி வருவதைப் பொறுக்காத சில விலங்குகள் அந்த சிங்கத்தின் மீது பொறாமை கொண்டு ஒரு கூட்டம் கூடி, “இந்த சிங்கம் மட்டும் தான் இந்த காட்டுக்கு ராஜாவாக இருக்கணுமா? இது என்ன திருத்தப்படக்கூடாத சட்டமா? இந்த சட்டத்தை நாம் மாற்ற வேண்டும்,” என்று விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருந்ததாம்.

அப்போது அங்கு வந்த நரி, “சிங்கம் ஏன் காட்டு ராஜா? அதுதான் அதிக பலம் வாய்ந்த ஒரு விலங்கு. அதனால்தான் சிங்கம் எப்போதும் காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது,” என்று கூறியது.

அதனைக் கேட்ட புலி, “சிங்கத்தைவிட எடையும் உயரமும் சண்டையிடும் திறனும் என்னிடம் இரண்டு மடங்கு உள்ளது,” என்று பேசியது.

அதற்கு நீர்யானை, “சிங்கம், புலி இரண்டையும்விட நான்தான் அதிக பலமானவன்,” என்றது.

இப்படியே காண்டாமிருகம், ஒட்டகச்சிவிங்கி, முதலை, யானை யாவும் தங்களைப் பற்றி பெருமையாகப் பேசத் தொடங்கின.

இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த குரங்கு ஒன்று, “இந்த காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அது எந்த விலங்கையும் கண்டும் பயந்ததே கிடையாது. அதற்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. அதனால்தான் அது காட்டுக்கே ராஜாவாக இருக்கிறது,” என்று கூறியது.

குரங்கு சொன்னதை ஏற்றுக்கொள்ளாத விலங்குகள் மறுநாள் சிங்கத்தை அடித்து காட்டை விட்டு விரட்ட முடிவு செய்து நரியை அழைத்து, “நாளை நீ போய் சிங்கத்திடம் ஏதாவது சொல்லி அதன் குகையில் இருந்து வெளியே அழைத்து வா,” என்றன.

மறுநாள் நரி சிங்கத்திடம், “ராஜாவே! உங்களைப் பார்க்க விலங்குகள் வந்திருக்கின்றன. ஏன் என்று தெரியவில்லை,” என்று தந்திரமாக கூறியது.

நரியை நம்பிய சிங்கமும் வெளியே வந்தது. அதுதான் சமயம் என்று காத்திருந்த அனைத்து விலங்குகளும் சிங்கத்தை தாக்கின. எதிர்பாராத தாக்குதலால் சிங்கத்திற்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.

விலங்களின் தாக்குதலைப் புரிந்துகொண்ட சிங்கம் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி ஒவ்வொரு விலங்கையும் தாக்கி அவற்றை பின்வாங்க வைத்தது. அதன் பின் அனைத்து விலங்குகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ரத்தக் காயத்துடன் குகைக்குள் சென்றது.

மறுநாள் காலையில் விலங்குகள் ஒன்றுகூடின. “நாம் தாக்கியதால் சிங்கத்திற்கு அதிக காயம் ஏற்பட்டது. அதனால் அது குகைக்குள்ளேயே இறந்திருக்கும்,” என்று பேசிக்கொண்டன.

அப்போது உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் அதே கம்பீர நடையுடன் எந்த ஒரு பயமும் இன்றி சிங்கம் குகையில் இருந்து வெளியே வந்து, ‘நான் யார்? என்னுடைய பலம் என்ன என்று எனக்குத் தெரியும். இப்போது நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்,’ என்பதுபோல கர்ஜித்தது. சிங்கம் கர்ஜித்ததைக் கண்ட அனைத்து விலக்குகளும் பயந்து ஓட்டம் பிடித்தன.

சிங்கம் காட்டிற்கு ராஜாவாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதனிடம் உள்ள பலத்தாலோ, விலங்குகளை தாக்கும் திறனாலோ இல்லை. அந்த சிங்கம் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதனை எதிர்கொள்ளமுடியும் என்ற ஒரு நம்பிக்கையும் பயம் என்பதே அதனிடம் இல்லை என்பதையும் அதனால்தான் அது காட்டிற்கு ராஜாவாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டன.

சிங்கம் சில நாள்களில் உடல்நலம் தேறி மீண்டும் கம்பீரமாக கர்ஜனை செய்துகொண்டு காட்டை வலம் வரத் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்