குடிமைத் தற்காப்புத் தினம்
ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவு, உடுத்த உடை, குடியிருக்க இடம் என அனைத்தும் கிடைக்கச் செய்வோம்!
வீரத்தின் அடையாளத்தைக் காட்டி நாட்டைக் காக்கும் ராணுவத்தைப் பாராட்டுவோம்!
உயிரைப் பணயம் வைத்து மக்களின் உயிர்காக்கும் காவல்படையை நாம் போற்றுவோம்!
உழைப்பாலும் உண்மையாலும் நாம் உயர்ந்து காட்டுவோம்!
ஹனிஸ்ரீ சிவசங்கர் தொடக்கநிலை 6
கண்களுக்குத் தெரியாத எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தல்
பிப்ரவரி 15ஆம் நாளன்று எங்கள் பள்ளியில் குடிமைத் தற்காப்புத் தினம் அனுசரிக்கப்பட்டது.
சிங்கப்பூர் காவல் துறை அதிகாரிகள் சில பயிற்சி பெற்ற மோப்ப நாய்களுடன் எங்கள் பள்ளிக்கு வந்திருந்தார்கள்.
தற்காப்புக்கு நாய்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பற்றி காவல் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் 1984ஆம் ஆண்டு, பிப்ரவரி 15ஆம் நாளன்று குடிமைத் தற்காப்புத் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உலகில் சிங்கப்பூர் போன்ற சிறிய பலதரப்பட்ட மக்களைக் கொண்ட நாடு பாதுகாப்பாக இருக்க முழுமைத் தற்காப்பு என்பது மிகவும் அவசியம்.
நம் நாட்டின் முழுமைத் தற்காப்பு ஆறு தூண்களைக் கொண்டது. அவை ராணுவத் தற்காப்பு, பொருளியல் தற்காப்பு, குடிமைத் தற்காப்பு, சமூகத் தற்காப்பு, மனோவியல் தற்காப்பு, மின்னிலக்கத் தற்காப்பு ஆகியவை ஆகும்.
இந்த முழுமைத் தற்காப்புத் திட்டத்தில் 2019ஆம் ஆண்டு மின்னிலக்கத் தற்காப்பு இணைக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவதன் மூலம் மின்னிலக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும் என்று நம்பப்படுகிறது. இவற்றின்மூலம் நம் கண்களுக்குத் தெரியாத எதிரிகளிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.
அதற்கு நாம் அனைவரும் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதற்கேற்ப ஒற்றுமையாக இருந்து நமது பங்கை ஆற்ற வேண்டும்.
ஹன்சிகா மோஹன்குமார் தொடக்கநிலை 6
வலுவான ஒருங்கிணைந்த தேசத்தை உருவாக்க
குடிமைத் தற்காப்பு என்றால் என்ன? ஏன் குடிமைத் தற்காப்புத் தினம் அனுசரிக்கப்படுகிறது? போன்ற கேள்விகள் உங்கள் மனங்களில் எழக்கூடும். அவற்றுக்கான விடைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
குடிமைத் தற்காப்பு என்பது ஒரு வலுவான பாதுகாப்பான ஒருங்கிணைந்த தேசத்தைக் கட்டியெழுப்ப ஒவ்வொரு சிங்கப்பூரரும் தனித்தனியாகவும் கூட்டாகவும் பங்களிப்பதை உள்ளடக்கியது.
நாம் வலிமையாக இருந்தால் எவ்வித நெருக்கடி நிலையையும் சமாளிக்க முடியும். சிங்கப்பூர் பொது எச்சரிக்கை சமிக்ஞை ஒலிக்குப் பின் முக்கிய அறிவிப்பு செய்யப்படும்.
இது அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில் ஒலிக்கப்படுகிறது. குடிமைத் தற்காப்புத் தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது என்று பார்த்தால் ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது நமது முன்னோர்கள் அனுபவித்த துன்பங்களை மக்களுக்கு நினைவூட்ட முயல்கிறது.
நம் நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டுமாயின் நாம் ஒவ்வொருவரும் நம் பங்கை ஆற்றிடுவோமாக.
சுவார்நி ஸ்ரீ செல்வகுமார் தொடக்கநிலை 6
ஒன்றாக நாம் சிங்கப்பூரை வலுவாக வைத்திருப்போம்
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் தேதி முழுமைத் தற்காப்புத் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1942ல் ஜப்பானியரிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததை இந்நாள் குறிக்கிறது.
ஜப்பானிய ஆக்கிரமிப்பின்போது நமது முன்னோர்கள் அனுபவித்த துன்பங்களை மக்களுக்கு நினைவூட்டும் வகையிலும் ஒரு நாட்டிற்குத் தற்காப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்ததால் 1984ல் முழுமைத் தற்காப்பு தொடக்கம் கண்டது.
நமது நாட்டு மக்களின் உயிர்வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காகவும் நாட்டின் நவீனப் பாதுகாப்பு உத்தியான முழுமைத் தற்காப்பை நம் மக்களுக்கு மீண்டும் நினைவுக்கூறவும் இந்நாள் நமக்கு உணர்த்துகிறது.
‘ஒன்றாக நாம் சிங்கப்பூரை வலுவாக வைத்திருப்போம்’ என்பது நமது முழுமைத் தற்காப்பின் முழக்க வரியாகும். தனி மனிதனின் பாதுகாப்பிலும் நாட்டின் பாதுகாப்பிலும் அனைவருக்கும் பங்கு உள்ளது என்பதை இந்த முழக்க வரி நினைவூட்டுகிறது.
ஷமித்தா தொடக்கநிலை 5
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
சிங்கப்பூரில் 1984ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முழுமைத் தற்காப்புத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
முழுமைத் தற்காப்புத் தினம் என்பது அனைத்துக் குடிமக்களும் சவால்கள் நிறைந்த இந்த உலகில் ஒன்று சேர்ந்து பாதுகாப்பான சிங்கப்பூரை உருவாக்கப் பாடுபடுவதாகும்.
பயங்கரவாதத் தாக்குதல்கள், ரசாயனக் கழிவுகள், சார்ஸ், கொவிட்-19 போன்ற தொற்றுநோய்கள் மற்றும் பலவிதமான அவசர நிலைகளுக்குச் சிங்கப்பூர் தயாராக இருப்பதை உறுதிசெய்ய சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உருவானது.
நம் நாட்டின் முழுமைத் தற்காப்பு ஆறு தூண்களைக் கொண்டது. அவை இராணுவம், குடிமை, பொருளியல், மனோவியல், சமூகம் மற்றும் மின்னிலக்கத் தற்காப்புகள் ஆகும். இவற்றின் மூலம் நம் கண்களுக்குத் தெரியாத எதிரிகளிடமிருந்து நம்மையும் நம் நாட்டையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
நாம் அனைவரும் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
கிரித்திக் தொடக்கநிலை 5
ஜப்பானியர்களிடம் ஆங்கிலேயர்கள் சரணடைந்த நாள்
1942ஆம் ஆண்டில் சிங்கப்பூர் ஜப்பானியர்களிடம் சரணடைந்ததை நாளை முழுமைத் தற்காப்புத் தினம் குறிக்கிறது. ஃபோர்டு தொழிற்சாலையில் ஜப்பானியர்களிடம் ஆங்கிலேயர்கள் சரணடைந்த நேரம் சரியாக மாலை 6.20 மணியாகும்.
அந்தத் தருணத்தைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 15ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு சிங்கப்பூர் முழுவதும் அபாய ஒலி ஒலிக்கப்படுகிறது.
ஷெல்டன் தொடக்கநிலை 5
யுஸ்ரா ஷப்பா
தொடக்கநிலை 5

