வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி

வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி

3 mins read
a7e73bfa-be4c-43da-89c7-6477ab588503
மகனுக்கு அறிவுரை கூறும் அம்மா. - படம்: இணையம்

சிறுவன் ஒருவன் இளம் வயதிலேயே சிறந்த அறிவாளியாக விளங்கினான். ஆனால், எந்த வேலையையும் ஒரு குறிக்கோளுடன் செய்யமாட்டான். அவனுடைய போக்கைப் பார்த்த அவனுடைய தாயார் மனம் வருந்தினார்.

ஒருநாள் அவர் தன் மகனை அழைத்து பூதக்கண்ணாடியையும் சில காகிதங்களையும் கொண்டு வரச்சொன்னார். சிறுவனும் அவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான்.

அவனுடைய தாயார் அந்த காகிதங்களைத் தரையில் போட்டு அதன் மேல் பூதக் கண்ணாடியை வெயிலில் காட்டி, காகிதத்தின் மேல் சூரிய ஒளி படும்படிக் காட்டினார்.

பூதக்கண்ணாடியைப் பிடித்த தாயின் கைகள் கவனக்குறைவால் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்தன.

அதைப் பார்த்த அவருடைய மகன் ‘அன்னை என்ன செய்கிறார்? எனக்கு ஏதோ மறைமுகமாக அறிவுறுத்துகிறார்,’ என்பதை உணர்ந்தான்.

நீண்ட நேரத்திற்குப் பிறகு அன்னை, தனது கைகளைப் பூதக்கண்ணாடியின் ஒளிக்குவியல் காகிதத்தின் மேல் படுமாறு குறிக்கோளுடன் கைகளை அசைக்காமல் நீட்டினார்.

பூதக்கண்ணாடியின் மீது சூரிய ஒளி பட்டு அதன் மூலம் கீழே இருந்த தாளில் அந்த ஒளிபட்டு, காகிதம் தீப்பிடித்து எரிந்தது.

அதைக் கவனத்துடன் பார்த்த அந்த சிறுவன் ஆச்சரியப்பட்டான்.

அப்போது அவனுடைய தாயார், “ஒருமுகப்படுத்திய ஒளிக்கதிர்கள் நெருப்பாகி காகிதத்தை எரிக்கும். ஆனால், ஒருமுகப்படுத்தாத கதிரின் ஒளியில் நெருப்பு உண்டாகாது.

“அதுபோல் நீயும் உன் மனதை ஒருமுகப்படுத்தினால் நீ செய்யும் வேலையில் வெற்றி பெறுவாய்,” என்று அறிவுரை கூறினார்.

தனது மனதில் தாயாரின் வார்த்தைகளைப் பதிய வைத்துக்கொண்டான் அந்தச் சிறுவன். அன்று முதல் மன ஒருமைப்பாட்டுடன் தனது செயல்களைச் செய்யத் தொடங்கினான்.

அந்தச் சிறுவன்தான் பிற்காலத்தில் உலகமே போற்றும் சர்.சி.வி.ராமன்.

சர்.சி.வி.ராமன் மின்காந்த அலைகளைக் கண்டறிந்து அளக்க உதவும் ‘ஸ்பெக்ட்ரோகிராஃப்’ வகையைக் கண்டுபிடித்தார்.

தனது தாயார் சொல்லிக்கொடுத்த ஒருமுகப்படுத்துதலை மனதில் கொண்டு ஒளிச் சிதறல் குறித்த தனது சோதனைகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?

வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவம் போன்ற துறைகளுக்கு பல நாடுகள் நோபல் பரிசுகளை வழங்குகின்றன.

அவற்றில் அமைதிக்கான நோபல் பரிசை நார்வே (கல்வி நிறுவனம்) வழங்குகிறது.

வேதியியல், இயற்பியல், இலக்கியம், மருத்துவம் போன்ற துறைகளுக்கு ஸ்வீடன் (கல்வி நிறுவனம்) வழங்குகிறது.

1913ல் நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் இரவீந்திரநாத் தாகூர்.

1979ல் அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1930ல் சர்.சி.வி. ராமனுக்கு இயற்பியல் துறையில் ராமன் விளைவு படைப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1968ல் ஹர். கோவிந்த் குரானாவிற்கு மருத்துவத் துறையில் மரபியல் படைப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1983ல் சுப்பிரமணிய சந்திரசேகருக்கு இயற்பியல் துறையில் சந்திரசேகர் லிமிட் என்ற படைப்பிற்காக நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.

1998ல் பொருளாதாரத்திற்காக அமர்த்தியாசென் நல இலக்கணம் என்ற படைப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்.

2000ல் இலக்கியத் துறையில் V.S. நெய்பால் சுற்றுச்சூழல் படைப்பிற்காக நோபல் பரிசு பெற்றார்.

2009ல் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் என்பவருக்கு வேதியியல் துறையில் ரைபோசோம் படைப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2014ல் கைலாஷ் சத்தியார்த்தி அமைதிக்கான நோபல் பரிசு குழந்தை தொழிலாளர் நலன் படைப்பிற்காக பெற்றார்.

குறிப்புச் சொற்கள்