தமிழ் முரசுக்கு கற்றல் பயணம்

தமிழ் முரசுக்கு கற்றல் பயணம்

2 mins read
அனுஷா செல்வமணி
dbefa3f8-e269-420c-a346-f111ff2c6a87
பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் எஸ்பிஹெச் ஊடக நிலையத்திற்கு மே 17ஆம் தேதி வருகை புரிந்தனர். அவர்களுடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் தமிழ்முரசு நாளிதழின் செய்தியாளர் அனுஷா செல்வமணி. - படம்: கவிந்திரன்
multi-img1 of 5

மாணவர்களிடம் செய்தித் துறை அனுபவங்களைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தமிழ் முரசு நாளிதழ் அண்மையில் ஒரு கற்றல் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பாசிர் ரிஸ் கிரெஸ்ட் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 22 மாணவர்கள் எஸ்பிஹெச் ஊடக நிலையத்திற்கு மே 17ஆம் தேதி வருகை தந்தனர்.

அவர்களை வரவேற்ற தமிழ் முரசு நாளிதழின் செய்தியாளர் அனுஷா செல்வமணி, மாணவர்களுக்குச் செய்தித்துறையைப் பற்றி அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடன் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

மின்னிலக்கமயமாதலை நோக்கிச் செல்லும் இக்காலத்தில், தமிழ் முரசு அதற்கு ஆயத்தமாகும் வகையில் அதிகளவில் முயற்சி எடுத்து வருவதையும் அனுஷா, மாணவர்களிடம் விளக்கிக் கூறினார்.

காணொளிகள், வலையொளிகள் தயாரிப்பது போன்றவற்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அனுஷா, செய்தித்துறையில் இளையர்களுக்கு பல்வேறு வகையான வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும் மாணவர்களிடம் சொன்னார்.

அதைத்தொடர்ந்து மாணவர்களும் அவர்களின் தமிழ் ஆசிரியர்களும் தமிழ் முரசு அலுவலகத்தைப் பார்வையிடச் சென்றனர்.

தமிழ் முரசு நாளிதழின் ஆசிரியர் த.ராஜசேகர் மாணவர்களுடன் செய்தித்துறையைப் பற்றி மேலும் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்ட பின்னர், மாணவர்கள் எஸ்பிஹெச் ஊடக நிலையத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட ஸ்டூடியோ +65 ஒளிப்பட நிலையத்தைக் காணச் சென்றனர்.

அதில் வலையொளிகள், காணொளிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

செய்தித்துறையில் தனக்கு ஆர்வம் இருப்பதாகக் கூறிய மாணவர் விஜய், “நான் 17 வயது அடைந்தவுடன் தமிழ் முரசு நாளிதழில் வேலைப்பயிற்சி மேற்கொள்ள விரும்புகிறேன். இந்தத் துறையில் இவ்வளவு வேலை வாய்ப்புகள் இருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை,” என்று கூறினார்.

sanush@sph.com.sg

குறிப்புச் சொற்கள்